கோலாலம்பூர், நவம்பர் 2 - செப்பாங் அனைத்துலக பந்தய தளத்தில் (SIC) நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்த 2026 மலேசிய மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரி(GP) பந்தயத்தை சிறந்த முறையில் நடத்தியதற்காக, அதன் பணியாளர்கள், ஏற்பாட்டாளர்கள், தொண்டூழியர்கள், மோட்டார் சைக்கிள் விளையாட்டு ரசிகர்கள் ஆகியோருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாண்டின் மோட்டோஜிபி ( MotoGP) பதிப்பு, உலகின் முன்னணி பந்தய வீரர்களுக்கு இடையே நிலவிய கடுமையான போட்டி மற்றும் பல மறக்க முடியாத தருணங்களுடன் மிகவும் விறுவிறுப்பாகவும் துடிப்புடனும் அமைந்ததாக அன்வார், தமது அதிகாரப்பூர்வ பேஸ்பூக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"வெற்றி பெற்ற அனைவருக்கும் மற்றும் பங்கேற்ற அனைத்து பந்தய வீரர்களுக்கும் வாழ்த்துகள். இந்த பந்தயத்தை வெற்றிகரமாக்க உழைத்த அனைத்து பணியாளர்கள், ஏற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு எனது நன்றிகள்.
மோட்டோஜிபி போன்ற மோட்டார் சைக்கிள் விளையாட்டுகளின் உற்சாகமும் உத்வேகமும், மேலும் பல இளைஞர்களை மலேசியக் கொடியை உலக அரங்கில் உயர்த்திப் பறக்கச் செய்ய தூண்டுகோலாக அமையட்டும்! மீண்டும் செப்பாங்கில் சந்திப்போம்," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், மோட்டோஜிபி விளையாட்டு பொழுதுபோக்கு குழுவின் (MotoGP Sports Entertainment Group) தலைமை நிர்வாக அதிகாரி கார்மலோ எஸ் பெலெட்டாவைச் (Carmelo Ezpeleta) சந்தித்த பிரதமர், இந்த விளையாட்டின் மேம்பாடு மற்றும் மலேசியாவின் அனைத்துலக நற்பெயரை உயர்த்துவதற்கான அதன் சாத்தியக்கூறுகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

செப்பாங்கில் நடக்கும் இந்த பந்தயப் போட்டிகளை வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்காமல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதற்கும் உகந்த ஒரு சிறந்த பொருளாதார வாய்ப்பாக மலேசியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மோட்டார் சைக்கிள் விளையாட்டு ரசிகர்களுக்கு, மலேசியா பரிச்சயமான ஒரு நாடாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





