ஷா ஆலாம், நவ 1 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மலேசியாவில் இந்திய வெங்காயத்தின் விலை அதிகரிக்கலாம்.
இந்தியாவின் மிக பெரிய விவசாய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் போதிய மழையின்மை காரணமாக , விளைச்சல் சுமார் 40 விழுக்காடு குறைந்துள்ளது.
எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் முறையற்ற பருவமழை காரணமாக புதிய 'காரிஃப்' (Kharif) ரக வெங்காயத்தின் வரத்து தாமதமாகியுள்ளது.
இதனால் இந்தியச் சந்தையிலேயே வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
வறட்சியின் காரணமாக உற்பத்தி 30 முதல் 40 விழுக்காடு வரை வீழ்ச்சியடையக்கூடும் என ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையைக் கொண்ட மகாராஷ்டிராவின் லாசல்காவ்ன் (Lasalgaon) விவசாயப் பொருட்கள் சந்தைக் குழுவின் தலைவர் ஞானேஷ்வர் கிசான் ஜக்தாப் தெரிவித்தார்.
எனினும், தீபாவளிக்குப் பிறகு அண்மைய நாட்களில் பெய்த மழையால் நிலைமை சற்றே சீரடையலாம் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.
மலேசியா தனது வெங்காயத் தேவையில் 50 விழுக்காட்டிற்கும் மேலாக இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
இதில் மகாராஷ்டிர மாநிலமே பெரும் பங்கைக் கொண்டுள்ளது. மலேசியர்கள் ஆண்டுதோறும் சுமார் 750,000 மெட்ரிக் டன் வெங்காயத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று கூட்டரசு விவசாய சந்தைப்படுத்தல் வாரியம் (FAMA) தெரிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் மலேசியா போன்ற நாடுகள், அங்குள்ள மொத்த விற்பனை மற்றும் ஏற்றுமதி விலை உயர்வால் கூடுதல் கொள்முதல் செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நாசிக் நகரைச் சேர்ந்த முன்னணி ஏற்றுமதியாளர் சஞ்சய் ஹோல்கர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 முதல் 10 வரை ஆஸ்திரேலிய பருப்பு, துருவிய தேங்காய், பெரிய சிவப்பு வெங்காயம் மற்றும் இந்தியச் சிறு வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளது.
தற்போது உள்ளூர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் சுமார் RM4 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



