ஷா ஆலாம், நவ 1 : முஸ்லீம் பயனீட்டாளர்கள் தாங்கள் வாங்கும் கோழி இறைச்சியின் ஹலால் தகுதியை உறுதி செய்ய கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வணிகர்களை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கக் கூடாது என்று மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கத்தின் (PPIM) தலைமை ஆர்வலர் டத்தோ நசிம் ஜோஹான் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து கோழி அறுப்பு தளங்களுக்கு ஹலால் சான்றிதழ் கட்டாயமில்லை என்பதால், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்காக கோழி இறைச்சிகளை விற்கும் தளங்களும் உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இறைச்சி இஸ்லாமிய சட்டதிட்டங்களின்படி முறையாக வெட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் பொறுப்பு பயனீட்டாளர்களுக்கும் உண்டு என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஹலால் முறைப்படி வெட்டப்பட்டாலும், அந்த இறைச்சி சுத்தமாகவும், தரமாகவும், உண்பதற்குப் பாதுகாப்பானதாகவும் இருக்கிறதா என்பதையும் பயனீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
கோழிகள் அறுக்கப்படும்போது துடிக்காமல் இருக்க மின் அதிர்ச்சி கொடுத்து மயக்கமடையச் செய்யும் (Stunning) முறை சில நிபந்தனைகளின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், கோழி அறுக்கப்படுவதற்கு முன்பே மின்சாரத்தின் வேகத்தால் இறந்துவிடாதவாறு அதன் அளவு மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.
முன்னதாக, பூச்சோங்கில் உள்ள ஒரு கோழி அறுப்பு தளத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குப் புறம்பாகவும் ஹலால் விதிமுறைகளை மீறியும் கோழி இறைச்சி கையாளப்பட்டது கண்டறியப்பட்டது. அத்தளத்தில் இருந்து 6.5 டன்னுக்கும் அதிகமான இறைச்சி பறிமுதலும் செய்யப்பட்டது.



