பெட்டாலிங் ஜெயா, நவ 1 : பெட்டாலிங் ஜெயா நகரின் ஐந்து முக்கியமான பகுதிகளில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, 10.73 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்திட்டங்கள் 2027 ஏப்ரலுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் தெரிவித்தது.
வடகிழக்கு பருவமழை மாற்றத்தின் போது ஏற்படும் திடீர் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான 'குவிக்வின்' (Quickwin) திட்டத்தின் முதற்கட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைகிறது.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் தலைவர் டத்தோ முகமட் யாசித் பின் சைரி அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் இத்தகவலைத் தெரிவித்தார்.
முதற்கட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் 2026 அக்டோபரில் தொடங்கப்பட்டு, 2027 ஏப்ரலுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கெராய் 223, செக்ஷன் 51ஏ, பிஜேஇயு 1ஏ/4எஃப் சுரங்கப்பாதை மற்றும் கம்போங் செம்பாகா, காயு ஆரா ஆகிய ஐந்து முக்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எதிர்கால தீவிர காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் பின் ஹாஷிமின் தலையீட்டின் பேரில், நீர்ப்பாசன-வடிகால் துறை மற்றும் பொதுப்பணித்துறையுடன் இணைந்து இத்திட்ட செயலாக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
திடீர் வெள்ளத்தைக் குறைக்க 'குவிக்வின்' திட்டத்தின் கீழ் மொத்தம் 15 திட்டங்களுக்கு 21 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டப் பணிகள் போக மீதமுள்ள 10 திட்டங்கள் 10.31 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டில் 2027 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதற்கான கொள்முதல் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும்.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் ஒட்டுமொத்த வெள்ளத் தடுப்புத் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் RM21 மில்லியன் மதிப்பிலான 15 'குவிக்வின்' திட்டங்கள், RM19.9 மில்லியன் மதிப்பிலான 12 நடுத்தர காலத் திட்டங்கள் மற்றும் RM36 மில்லியன் மதிப்பிலான 5 நீண்ட காலத் திட்டங்கள் அடங்கும்.
மேலும், மாநகராட்சி 2017 -ஆம் ஆண்டு முதல் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, இந்த அவசரத் திட்டங்கள் தவிர்த்து தனியாக RM62.6 மில்லியனைச் செலவிட்டுள்ளது.
இதற்காக நேரடி நீர் தேக்க அமைப்பு( Inline Detention) மற்றும் சிறு அணை அமைப்புகள், சாலைக்கு அடியில் இடத் தற்காலிக நீர் தேக்க முறை ( On-Site Detention ) மற்றும் ஆற்று நீர் உட்புகாமல் தடுக்கும் ஸ்காலிஸ் (SKaLiS) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றுடன் ஆற்றின் நீர்மட்டத்தைக் கண்காணிக்க அதிநவீன சென்சார்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் சைரன் அமைப்புகளும் நகரின் முக்கியப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன.





