டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி

1 நவம்பர் 2026, 3:25 AM
டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி

புது டில்லி, நவ 1 : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகல் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் தலைமையில், இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணி நடைபெற உள்ளது.

முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள இந்தப் பேரணி, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' (INDIA) கூட்டணியின் பல முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர். மேலும், இளைஞர்கள் தலைமையிலான செல்வாக்குமிக்க குழுவான 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) இந்த பேரணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, வரைவுப் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீவிரப் போராட்டம் வெடித்துள்ளது.

இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்களின் பெயர்களை நீக்கி பட்டியலைத் தூய்மைப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆனால், 'சிறப்பு தீவிர திருத்தம்' எனப்படும் இந்த நடவடிக்கை, தகுதியான வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கி, பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையமும் அரசாங்கமும் மறுத்துள்ளன.

டில்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாகவே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, டெல்லி போலீஸ் இந்த பேரணிக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மாலை 5 மணிக்குள் பேரணி களைய வேண்டும்; மைதானத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் மற்றும் மைதானத்திற்கு வெளியே எந்தவிதப் பேரணிகளும் நடத்தப்படக் கூடாது என நிபந்தனைகளை விதித்துள்ளது.

அசம்பாவிதங்களைத் தடுக்க ராம்லீலா மைதானம் மற்றும் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.