பெர்லின், நவ 1 : ஜெர்மனியில் கல்வி மேம்பாட்டை வலியுறுத்தியும், வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்கக் கோரியும் நடத்தப்பட்ட போராட்டங்களின் போது, பிராங்பர்ட் நகரில் முகமூடி அணிந்த கலவரக்காரர்கள் கடைகளை சூறையாடினர்.
ஜெர்மனியின் மிகப்பெரிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதை அடுத்து, சனிக்கிழமை பின்னேரம் பிராங்பர்ட் நகரில் கடைகள் சூறையாடப்பட்டன.
இவ்வாண்டு ஐரோப்பா முழுவதும் z தலைமுறையினர் (Gen Z) தலைமையிலான போராட்டங்களின் தொடர்ச்சியாகவே ஜெர்மனியிலும் இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
முன்னதாக செர்பியாவில் மாணவர் தலைமையிலான செயல்பாடுகள் அந்நாட்டின் நீண்டகால தலைவரை தேர்தல் மூலம் பதவியிறக்க உதவியது; அதே நேரத்தில் பிரான்சில் நடந்த போராட்டங்கள் கலவரம் மற்றும் சூறையாடலாக மாறின.
"Gen Z regelt" ( Z தலைமுறை பொறுப்பேற்கிறது) என்ற பிரச்சாரக் குழுவினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஜெர்மனிய போராட்டங்கள் பெர்லின், பிராங்பர்ட் மற்றும் மியூனிக் உட்பட 34 நகரங்களில் நடைபெற்றன.
ஜெர்மனியின் பல இளைஞர்கள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் தவித்து வரும் நிலையில், இக்குழுவினர் கட்டாய ராணுவச் சேவையை எதிர்ப்பதாகவும், கல்வித்துறையில் கூடுதல் முதலீட்டை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியின் நிதி மையமான பிராங்பர்ட்டில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், குறைந்தபட்சம் இரு கடைகள் சூறையாடப்பட்டன மற்றும் பல கடைகள் சேதமடைந்தன.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தீவிரமாக முயன்று வருவதாக ராய்ட்டர்ஸ் சாட்சி ஒருவர் தெரிவித்தார்.
பிராங்பர்ட் போலீசார் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், வன்முறை, கலவரங்கள் தொடர்ந்து வருவதாகவும், நகர மையத்தில் பல கடைகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, அவசரப் படையினர் மீது கையெறி குண்டுகள் வீசப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் யாரும் நகர மையத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும், அங்கு இருப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏற்பாட்டாளர்கள் ஆரம்பத்தில் 182,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், சனிக்கிழமை மதியம் வெளியான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அதற்கும் குறைவாகவே மக்கள் வந்திருந்ததைக் காட்டுகின்றன.
பிராங்பர்ட், மியூனிக் மற்றும் பெர்லின் நகர போலீசார், அதிகபட்சமாக 18,000 போராட்டக்காரர்கள் பங்கேற்றதாகப் பதிவு செய்துள்ளனர்.
இது ஏற்பாட்டாளர்களின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 36,000 பேரில் பாதியாகும்.
ஹாலோவீன் கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போன இந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாகவே இருந்ததாக ஜெர்மனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.



