டைபாய்டு தடுப்பூசி செலுத்தத் தவறும் உணவு கையாளுநர்களுக்கு RM1,000 வரை அபராதம்

1 நவம்பர் 2026, 2:27 AM
டைபாய்டு தடுப்பூசி செலுத்தத் தவறும் உணவு கையாளுநர்களுக்கு RM1,000 வரை அபராதம்

பெட்டாலிங் ஜெயா, நவ 1 - தங்களது உணவு தளங்களில் பணிபுரியும் ஊழியர்கள் டைபாய்டு (TY2) தடுப்பூசி போடுவதை உறுதி செய்யாத உணவு வணிக உரிமையாளர்களுக்கு அடுத்தாண்டு ஜனவரி முதல் 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் அறிவித்துள்ளது .

2024 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 4,119 முக்கிய உணவு கையாளுதல் குற்றங்களில், 22.8% (940 குற்றங்கள்) இந்த டைபாய்டு தடுப்பூசி போடாததால் ஏற்பட்டவை என்பதால் இந்த புதிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30 அன்று நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற தலைவர் டத்தோ முகமட் யாசிட் பின் சைரி இந்த புதிய அபராத விகிதங்களை அறிவித்தார்.

தடுப்பூசி இல்லாத ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த அபராதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5 ஊழியர்கள் வரை தடுப்பூசி போடாமல் இருந்தால் RM250 அபராதம்,

6 முதல் 15 ஊழியர்கள் வரை தடுப்பூசி போடாமல் இருந்தால் RM500 அபராதம்,

16 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் RM1,000 அபராதம் விதிக்கப்படும்.

இதற்கு முன்பு, இந்த குற்றத்திற்கு நிலையான தொகையாக RM250 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

தற்போதுள்ள அபராத முறை போதுமான விழிப்புணர்வையோ அல்லது பயத்தையோ ஏற்படுத்தவில்லை. எனவே, விதிகளைப் பின்பற்றுவதை அதிகரிக்கவும், மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதைத் தடுக்கவும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உணவு அல்லது மாசுபட்ட நீர் மூலம் பரவக்கூடிய சால்மோனெல்லா டைபி (Salmonella Typhi) பாக்டீரியாவால் ஏற்படும் டைபாய்டு நோயைத் தடுக்க இந்த TY2 தடுப்பூசி மிக அவசியமானது என்பதால், இது உணவு உரிமம் பெறுவதற்கான முக்கிய நிபந்தனையாக உள்ளது.

எனவே, அனைத்து ஊழியர்களின் தடுப்பூசி அட்டைகள் அல்லது சான்றிதழ்களைப் பரிசோதனைக்காகத் தயாராக வைத்திருக்குமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வணிகர்கள் தங்களது ஊழியர்களின் தடுப்பூசி பதிவுகளைச் சரிபார்த்துக்கொள்ள ஏதுவாக, இந்த நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ளும் .

அதைத் தொடர்ந்து, ஜனவரி 2027 முதல் புதிய அபராத அமலாக்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் .

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.