அறுப்பதற்கு முன் மின் அதிர்ச்சி : இறந்த பின் கோழிகள் அறுக்கப்பட்டதாக MAIS தகவல்

31 அக்டோபர் 2026, 10:14 AM
அறுப்பதற்கு முன் மின் அதிர்ச்சி :  இறந்த பின் கோழிகள் அறுக்கப்பட்டதாக MAIS தகவல்
அறுப்பதற்கு முன் மின் அதிர்ச்சி :  இறந்த பின் கோழிகள் அறுக்கப்பட்டதாக MAIS தகவல்

ஷா ஆலாம், அக் 31 : பூச்சோங்கில் முறையான ஹலால் சான்றிதழ் இன்றி கோழிகளை அறுத்து, பதப்படுத்தி மற்றும் விநியோகம் செய்து வந்த ஒரு தளம் , கோழிகளை கையாளுவதற்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட தண்ணீரில் நனைக்கும் அதிர்ச்சி முறையைப் (Stunning) பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

முதற்கட்ட சோதனையில், அதிகளவிலான மின்சார ஆற்றலைப் பயன்படுத்தியதால், கோழிகள் அறுக்கப்படுவதற்கு முன்பே உடனடியாக இறந்து விடுகின்றன என்பது கண்டறியப்பட்டதாக , சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (MAIS) தலைவர் டத்தோ சலேஹுதின் சைடின் கூறினார்.

சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (MAIS) தலைவர் டத்தோ சலேஹுதின் சைடின்

கோழிகள் அறுக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிடுவதால், அவை இஸ்லாமிய போதனைகளின்படி உயிருள்ள கோழிகளாக இல்லாமல், இறந்த உடல்களை அறுப்பதற்கு சமம் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று சுல்தான் சலாஹுதின் அப்துல் அஜிஸ் ஷா மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது சலேஹுதின் இதனைத் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையின் (JAIS) தலைமையில், போலீஸ், சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறை , மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (JAKIM) மற்றும் பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவை இணைந்து சம்பந்தப்பட்ட தளத்தில் சோதனையை மேற்கொண்டன.

விசாரணையில், 2004-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் அந்த கோழி அறுப்பு மையம் ஒரு முஸ்லிமுக்கு சொந்தமானது என நம்பப்படுகிறது. மேலும், இது முஸ்லிம்களுக்குச் சொந்தமான உணவகங்களுக்கு பதப்படுத்தப்பட்ட கோழிகளை விநியோகம் செய்து வந்துள்ளது.

கோழிகளை அறுப்பதற்கு முன்பே அவற்றை இறக்கச் செய்வது மிகவும் பொறுப்பற்ற செயலாகும் என்று கூறிய சலேஹுதின், சம்பந்தப்பட்ட நிறுவனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் நிலையில், இது போன்ற ஒரு விஷயம் எப்படி நடந்தது என்றும், அவர்கள் ஏன் முஸ்லிம்களை இவ்வளவு எளிதாக ஏமாற்றுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, விரிவான விசாரணை நடத்துவதற்காகச் சுகாதார விதிகளின் கீழ் அந்தத் தொழிற்சாலை வளாகத்தை இரு வாரங்களுக்கு மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் பூச்சோங்கில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட 'ஒப்ஸ் தாரிங் சில்லர்' (Ops Taring Chiller) சோதனையின் மூலம், இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாத 85,400 ரிங்கிட் மதிப்புள்ள 6.5 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கோழிகளை சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை பறிமுதல் செய்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.