கோலாலம்பூர், அக் 31 : ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் ஆக மேல் தளத்தில் உள்ள சொகுசு அறையில் (Penthouse) ‘மினி கேசினோ’ பாணியில் செயல்பட்டு வந்த சூதாட்ட அரங்கம் இன்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 16 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
'ஒப் தெம்போக்' (Op Tembok) நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை 1.50 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாதில் மார்சுஸ் தெரிவித்தார்.
இதில் 26 முதல் 50 வயதுக்குட்பட்ட 14 சீன நாட்டு ஆண்கள், ஒரு நேபாள நாட்டவர் மற்றும் ஒரு சீன நாட்டுப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் தொடக்க விசாரணையில், இந்த வளாகம் போக்கர் (Poker) விளையாட்டுகளை வழங்கும் மினி கேசினோ சூதாட்ட இடமாகப் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமேயான 'அழைப்பின் பேரில்' மட்டுமே இது இயங்கியுள்ளது. இதில் சீன நாட்டினர் மட்டுமே பங்கேற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இச்சோதனையின் போது ஒரு மேஜை, ஏழு நாற்காலிகள், ஒரு நுழைவு அட்டை , இரு பகடை செட்கள், ஒரு டீலர் கார்டு மற்றும் 5,180 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வண்ண சூதாட்ட சில்லுகள் , 52 விளையாட்டுச் சீட்டுகள் மற்றும் 1,000 ரிங்கிட் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூதாட்ட நடவடிக்கைகள் அல்லது குற்றச் செயல்கள் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், கோலாலம்பூர் போலீஸ் ஹாட்லைன் எண்ணான 03-2115 9999 அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.



