தென் கொரியாவிடமிருந்து மலேசியா முதல் FA-50M போர் விமானத்தைப் பெற்றது

30 அக்டோபர் 2026, 3:13 PM
தென் கொரியாவிடமிருந்து மலேசியா முதல் FA-50M போர் விமானத்தைப் பெற்றது

லபுவான், அக் 30 - நாட்டின் வான் தற்காப்பினை பலப்படுத்துவதற்காக , அரச மலேசிய விமானப்படை கொள்முதல் செய்த முதல் FA-50M இலகுரக போர் விமானத்தை இன்று மலேசியா அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டது.

தென்கொரியாவின் சச்சியோன் தளத்திலிருந்து புறப்பட்டு, லபுவான் விமானப்படை தளத்திற்கு வந்தடைந்த இந்த விமானத்தின் வருகையை மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலித் நோர்டின் இன்று நேரில் பார்வையிட்டார்.

இந்த போர் விமானத்தை முறைப்படி விமானப்படையிடம் ஒப்படைக்கும் அதிகாரப்பூர்வ விழா, வரும் நவம்பர் மாத பாதியில் பகாங், குவாந்தான் வான்படை தளத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், ராணுவத் திறனை மேம்படுத்தவும் இந்த போர் விமான கொள்முதல் முக்கியத்துவம் வாய்ந்தது என அமைச்சர் குறிப்பிட்டார்.

2028-ஆம் ஆண்டில் சேவையை நிறைவு செய்யும் ஹோக் ( Hawk) ரக போர் விமானங்களுக்கு மாற்றாக, FLIT-LCA திட்டத்தின் கீழ் மொத்தம் 18 FA-50M போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 2027-க்குள் முதல் 6 விமானங்கள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள விமானங்கள் 2028-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழுமையாகச் சேர்க்கப்படும்.

ஹோக் விமானங்கள் முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு, லபுவானில் எத்தனை விமானங்கள் நிறுத்தப்படும் என்பது பின்னர் முடிவெடுக்கப்படும்.

நாட்டின் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, இதைவிட நவீனமான இரண்டாம் கட்ட போர் விமானங்களை வாங்குவது குறித்தும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

தென்கொரியாவின் கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் தயாரித்துள்ள இந்த FA-50M விமானம், இருவர் அமரக்கூடிய அமைப்பைக் கொண்டது.

இது விமானப்படை வீரர்களுக்கான பயிற்சிக்கும், சவாலான போர் நடவடிக்கைகளுக்கும் ஒரே நேரத்தில் பயன்படும். மேலும், இது ஒலியை விட அதிவேகத்தில் மிக அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.

இந்த புதிய போர் விமானப் பிரிவைச் சிறப்பாக வழிநடத்த ஏதுவாக 6 விமானிகள், 6 பொறியியல் அதிகாரிகள் மற்றும் 45 தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 57 பேர் தென்கொரியாவில் தங்களின் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

தற்போது 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட எண்.51 ஸ்குவாட்ரன் பிரிவு இந்த விமானங்களைக் கையாளவுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.