ஷா ஆலாம், அக் 30 - தனிநபர் குடியிருப்புகளில், அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மை வாரியங்கள் தங்களின் உள்விதிகள் மூலமாகச் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் தேசிய தடகள வீராங்கனை நோராசீலா முகமது காலித், ஷாங் வில்லா அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு மேலாண்மை வாரியத்திற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கின் மனுவை நீதிமன்றம் பகுதி அளவில் அனுமதித்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்தத் தீர்ப்பின்படி, ஷாங் வில்லா அடுக்குமாடி குடியிருப்பின் உள்விதி 9.0-ஐப் பயன்படுத்தி நோராசீலா தனது குடியிருப்பில் மூன்று பூனைகளை வளர்ப்பதைத் தடுக்க முடியாது என்றும், அந்தப் பூனைகள் அங்கு இருப்பதால் எந்தவொரு விதிமீறலும் ஏற்படவில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
மேலும், மேலாண்மை வாரியம் தரப்பில் முன்வைக்கப்பட்ட பொதுவான புகார்களுக்கு நோராசீலாவின் பூனைகள்தான் காரணம் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
அதே வேளையில், உரிமையாளர்களின் அனுமதி இன்றிப் பொதுவான சொத்துப் பகுதியிலிருந்து செல்லப்பிராணிகளை அகற்றுவதற்கும், அதன் மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு மேலாண்மை வாரியம் பொறுப்பேற்காது என்று கூறும் உள்விதியின் குறிப்பிட்ட பிரிவுகள் சட்டத்திற்குப் புறம்பானவை மற்றும் செல்லாதவை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எந்தவொரு மேலாண்மை வாரியமும் நாட்டின் சட்டத்தை மீறிச் செயல்பட முடியாது என்பதையும், அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மைச் சட்டம் 2013-க்கு முரணாக உள்விதிகள் அமையக்கூடாது என்பதையும் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணிகள் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால், அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மை விதிகள் 2015-இன் கீழ் உள்ள உள்விதி 14-இன் படி மட்டுமே முறையான ஆதாரங்களுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து செல்லப்பிராணிகளும் தொந்தரவு விளைவிப்பவை என்ற அனுமானத்தின் அடிப்படையில் அல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையிலேயே மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.



