ஐ-சிட்டியில் வெள்ளத்தை தடுக்க புதிய குளம் அமைக்கத் திட்டம்

30 அக்டோபர் 2026, 11:59 AM
ஐ-சிட்டியில் வெள்ளத்தை தடுக்க புதிய குளம் அமைக்கத் திட்டம்

ஷா ஆலாம், அக் 30 - ஷா ஆலாம் செக்க்ஷன் 7-இல் உள்ள ஐ-சிட்டி (i-City) பகுதியிலும், கூட்டரசு நெடுஞ்சாலையின் சில பகுதிகளிலும் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியாக, கிள்ளான், தாமான் ராஷ்னாவில் (Taman Rashna) ஒரு புதிய வெள்ளத் தடுப்புக் குளம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தலைமையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27), அரசு அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டத்தில் அந்தத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஷா ஆலாம் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ சாபிதா சாஃபர் தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் வடிகால்- நீர்ப்பாசனத் துறை , பொதுப்பணித்துறை , கிள்ளான் அரச மாநகர் மன்றம் மற்றும் உள்ளூர் தொழில்துறை பங்குதாரர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

" ஐ-சிட்டி பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கு சுங்கை ராசா ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கே முதன்மைக் காரணமாக உள்ளது. அந்த ஆற்றிலிருந்து வழிந்தோடும் நீர் கூட்டரசு நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வடிகால், நீர்ப்பாசனத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வடிகாலில் பாய்ந்து, பின்னர் கிள்ளான் ஆற்றில் கலப்பதாக," சாபிதா சாஃபர் குறிப்பிட்டார்.

கடல் அலை அதிகமுள்ள காலங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடைவதாகவும் அவர் கூறினார்.

அப்போது கிள்ளான் ஆற்றின் உயர் நீர்மட்டம், முக்கிய வடிகாலில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுத்து, அருகில் உள்ள தாழ்வானப் பகுதிகளுக்குள் நீர் பின்னோக்கிப் பாயச் செய்கிறது. எனினும், இந்த வெள்ள நீர் வழக்கமாக 30 நிமிடங்களுக்குள் வடிந்துவிடுகிறது.

இதனிடையே, வெள்ளத் தடுப்புக் குளத்தின் கட்டுமானப் பணிகளையும், கூட்டரசு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வடிகால் அமைப்பை ஆழப்படுத்தி மேம்படுத்தும் பணிகளையும் நீர்ப்பாசன வடிகால் துறை மேற்பார்வையிடும்.

இருப்பினும், இதற்கான கட்டுமானச் செலவு குறித்து எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் பல அமைப்புகளின் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டிருப்பதால் அவற்றுக்கிடையேயான ஒருங்கிணைப்பு அவசியமாகிறது என்று அவர் கூறினார்.

"சுங்கை ராசா ஆறு நீர்ப்பாசன வடிகால் துறையின் கீழும், கூட்டரசு நெடுஞ்சாலை சாலை போக்குவரத்து துறையின் கீழும், தாமான் ராஷ்னா கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் கீழும் , மற்றும் ஐ-சிட்டி ஷா ஆலாம் நகராண்மைக் கழகத்தின் கீழும் வருகின்றன," என்று சாபிதா விளக்கினார்.

இதற்கிடையில், உடனடி நடவடிக்கையாக ஷா ஆலாம் நகராண்மைக் கழகம் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட வடிகால் வசதிகளைப் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் சேதமடைந்த கட்டமைப்புகளைக் கண்டறிந்து பழுதுபார்க்கவும், அடைப்புகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஐ-சிட்டிக்குள் உள்ள மற்றும் அதன் மேம்பாட்டாளரால் பராமரிக்கப்படும் வெள்ளத் தடுப்புக் குளங்கள் நிரம்பும் பட்சத்தில், அதிலிருந்து தண்ணீர் சுங்கை ராசா ஆற்றுக்குள் சீராக வெளியேறுவதை உறுதிசெய்யும் வகையில் அவை சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

ஐ-சிட்டியைச் சுற்றியுள்ள பகுதிகள் சமீபத்திய வாரங்களில் தொடர்ச்சியான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்தன.

இதில் மிகச் சமீபத்திய வெள்ளச் சம்பவம், கடந்த புதன்கிழமை (அக்டோபர் 28) மதியம் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து ஜாலான் கெலுலி 1C (Jalan Keluli 1C) அருகில் ஏற்பட்டது.

துகு கெரிஸ் (Tugu Keris) பகுதிக்கு அருகில் உள்ள சுங்கை ராசா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று ஷா ஆலாம் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

தற்போது ஷா ஆலாமில் சுமார் 13 வெள்ள அபாயப் பகுதிகள்உள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளுக்கு அருகில் அமைந்துள்ளதாகவும் சாபிதா குறிப்பிட்டார். இதில் கிள்ளான் ஆற்றை ஒட்டியுள்ள செக்க்ஷன் 13 பகுதியும், சுங்கை டாமன்சாரா ஆற்றை ஒட்டியுள்ள டிடிடிஐ ஜெயா (TTDI Jaya) மற்றும் கம்புங் மெலாயு சுபாங் (Kampung Melayu Subang) ஆகிய பகுதிகளும் அடங்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.