மாணவிக்கு பாலியல் தொல்லை : தாக்கப்பட்ட தலைமை ஆசிரியர் போலீசில் புகார்

27 அக்டோபர் 2026, 7:08 AM
மாணவிக்கு பாலியல் தொல்லை : தாக்கப்பட்ட  தலைமை ஆசிரியர் போலீசில் புகார்

ஷா ஆலாம்,அக் 27: பேராக்,பாகான் டத்தோவில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் படிவம் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 56 வயது தலைமை ஆசிரியர்போலீசில் புகார் அளித்துள்ளார்.

மாணவியின் குடும்பத்தினரால் தாம் தாக்கப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர் அந்த புகாரைச் செய்துள்ளார்.

மாணவியின் குடும்பத்தினர் புகார் அளித்த அடுத்த நாள், அக்டோபர் 25-ஆம் தேதி , சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் புகார் செய்துள்ளதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் அல்வி சய்னால் அபிடின் தெரிவித்தார்.

அந்த வீடியோ பரப்பப்பட்டதற்கும், மாணவியின் குடும்பத்தினர் தன் மீது தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த புகாரைச் செய்துள்ளார்.

"இது ஓர் அரசாங்க ஊழியர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இச்சம்பவத்தில் போலீஸ் மிக விரிவான, ஆழமான விசாரணையை மேற்கொள்ளும்," என்று பேராக் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

தலைமை ஆசிரியரின் புகாரின் பேரில், காயம் ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் கீழும், இணையத் தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக தொடர்பு - பல்லூடகச் சட்டம் 1998 பிரிவு 233-ன் கீழும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மாணவிக்கு தொலைபேசி மூலம் தனது 'காதல் மற்றும் அன்பை' வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு எதிரொலியாகவே, மாணவியின் குடும்பத்தினர் அவரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், தலைமை ஆசிரியர் உட்பட 9 சாட்சிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், அக்டோபர் 24-ஆம் தேதி மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், 2017 சிறார் பாலியல் குற்றங்கள் சட்டத்தின்பிரிவு 15(a)-ன் கீழ் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபத்லினா சிடெக் இந்த பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்குமாறு பேராக் மாநில கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

விசாரணை நிறைவடையும் வரை அந்த தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பாகான் டத்தோ மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.