ஷா ஆலாம், அக் 27 - சுபாங் ஜெயா நகரின் பிரபல வர்த்தகப் பகுதியான SS15, 2 கோடியே 80 லட்சம் ரிங்கிட் மதிப்பில் மேம்படுத்தப்படவுள்ளது.
நகர்ப்புற மறுவடிவமைப்பு திட்டத்தின் மூலம் 2027-ஆம் ஆண்டு முதல் அந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அந்த மேம்பாட்டு திட்டம் நடைபாதைகள், சுமூகமான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளை உள்ளடக்கியிருப்பதோடு, உள்ளூர் சமூகத்திற்கான புதிய சமூக மையத்தையும் கொண்டிருக்கும்.
திங்க் சிட்டி நிறுவனம் கடந்த மாதம் அதன் ஆறு மாத கால ஆய்வை முடித்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து, அந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் 2031- ஆம் ஆண்டு வரை கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படுமென சுபாங் ஜெயா மாநகராட்சியின் வர்த்தக திட்டமிடல் துறை தெரிவித்தது.
பொது இட மேம்பாட்டுக்கான 2 கோடியே 80 லட்சம் ரிங்கிட் தொகையில், சுபாங் ஜெயா மாநகராட்சி 2 கோடி ரிங்கிட் வழங்குகிறது.
திதிஜெயா லேண்ட் நிறுவனமும் (Titijaya Land Bhd), கமுடா நிறுவனமும் தலா 40 லட்சம் ரிங்கிட் பங்களிக்கிறது .
இந்த ஆய்வில் தடைகள் இல்லாத விரிவான நடைபாதைகள், தெளிவான பாதசாரிகள் கடக்கும் பாதைகள், மேம்படுத்தப்பட்ட விளக்கு வசதிகள், மேற்கூரையுடன் கூடிய தொடர்ச்சியான பாதைகள் மற்றும் பாதசாரிகளையும் வாகனங்களையும் பிரிக்கும் பாதுகாப்பான வழிமுறைகள் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக SS15 பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கும் நவீன சந்தைக்கும் இடையே ஒரு புதிய இணைப்பு தளம் மற்றும் மின் தூக்கி வசதியை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
SS15 பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை ஆகியவை வெறும் இடப் பற்றாக்குறையினால் மட்டும் ஏற்படவில்லை, மாறாக தற்போதுள்ள இடங்கள் பயன்படுத்தப்படும் முறையினால்தான் ஏற்படுகிறது என்று மாநகராட்சி விளக்கியது.
ஆய்வின்படி, சாலையோரங்களில் உள்ள 1,254 வாகன நிறுத்துமிடங்கள் 100 விழுக்காடு முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், சாலைக்கு அப்பால் உள்ள 3,730 வாகன நிறுத்துமிடங்கள் சுமார் 63 % மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
இதிலிருந்து தாராளமாக வாகன நிறுத்துமிடங்கள் காலியாக இருப்பதும், மக்கள் சாலையோர நிறுத்துமிடங்களையே அதிகம் நாடுகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனைச் சரிசெய்ய வாகன நிறுத்துமிட அமைப்புகளை மறுசீரமைத்தல், இரட்டை வரிசை வாகன நிறுத்தங்களைக் குறைத்தல், குறிப்பிட்ட இடங்களில் ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் இ-ஹெய்லிங் வாகனங்களுக்கான பிரத்யேக நிறுத்தங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
புதிய வாகன நிறுத்துமிடங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, தற்போதுள்ள இடங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.





