ஷா ஆலாம், அக் 27 - மலேசியா ஒரு முதியோர் நாடாக மாறும் போது அதற்கான சவால்களை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றது.
இந்நிலையில் பரிந்துரைக்கப்பட்ட மூத்த குடிமக்கள் மசோதா (Senior Citizens Bill), முதியோர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்து அவர்களின் திறன்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, மகளிர் மேம்பாடு சமூக நலத்துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
"இந்த மசோதாவின் வரைவு,வெறும் நலத்திட்டங்களை மட்டுமே வழங்காமல், உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் முதியோர்களின் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு முக்கியமான முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கிறது.
மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, கண்ணியம், குடும்ப ஆதரவு மற்றும் சமூகத்தில் சமமான பங்கேற்பு ஆகியவற்றுக்கான உரிமைகளை அங்கீகரிக்கும் ஒரு சட்டப்பூர்வ பாதுகாப்பு வலையாக இது இருப்பது மிகவும் அவசியம்." என அன்ஃபால் சாரி மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இதனிடையே, அந்த மசோதாவில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்களையும் அவர் சுட்டிக் காட்டினார்.
முழுமையான சுகாதாரப் பாதுகாப்பு, சட்டப்பூர்வ பாதுகாப்பு, பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குதல், பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றுக்கு அந்த சட்ட மசோதாவில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், மாறிவரும் தொழிலாளர் தேவைகளுக்கு ஏற்ப மூத்த குடிமக்கள் தொடர்ந்து பணியிடங்களில் நீடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் பொருளாதாரக் கட்டமைப்பும் திறன் மேம்பாடும் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.
இத்தகைய முயற்சிகள், முதியோர் நலன் மற்றும் பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கவும், தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குத் பங்களிக்கவும் வழிவகுக்குமென்றாரவர்.
இதற்கிடையில், மூத்த குடிமக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்த ஒரு விரிவான மூத்த குடிமக்கள் மசோதாவை மலேசியா விரைந்து அறிமுகப்படுத்த வேண்டும் என்று தேசிய மூத்த குடிமக்கள் ஆலோசனை மற்றும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டான் ஸ்ரீ லீ லாம் தை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.
முன்னாள் அரசு ஊழியரும் சமூக ஆர்வலருமான அவர், மலேசியாவின் மக்கட் தொகையில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தற்போது சுமார் 12 விழுக்காடாக உள்ளனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.




