ஷா ஆலாம், அக் 27 - திவால் நிலையிலிருந்து விரைவாக விடுபட நான்கு குறிப்பிட்ட தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தனித்து வாழும் தாய்மார்கள் அல்லது தந்தையர்கள் , நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள், குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் , மற்றும் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட வீட்டு வாங்குநர்கள் ஆகியோர் அதில் அடங்குவர்.
கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 'இரண்டாவது வாய்ப்புக் கொள்கை' விரைவுத் திட்டத்தின் கீழ் அந்த முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அந்தத் தரப்பினர் மீண்டும் தங்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்க உதவுவதற்கே அந்த முன்னுரிமை அளிக்கப்படுவதாக சிலாங்கூர் திவால் துறை (Insolvency Department) இயக்குநர் தெங்கு இந்தான் சுராயா தெங்கு இஸ்மாயில் தெரிவித்தார்.

எனினும், இதற்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, சம்பந்தப்பட்ட திவால் வழக்கு பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிர்வாகத்தில் இருந்திருக்க வேண்டும்.
இதனிடையே, தனித்து வாழும் பெற்றோர்கள் மீண்டும் வேலைக்குச் சென்று தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற ஏதுவாக அவர்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
அதேபோல, மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வெளிப்புறக் காரணங்களால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோருக்கும் இதிலிருந்து விடுபட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திவால் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தெங்கு இந்தான் அறிவுறுத்தினார்.
மேலும், அடுத்த 2027 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் நிலையான வருமானம் இல்லாதவர்கள் போன்ற பிற பிரிவினரும் இந்தத் திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படுவர் என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 2023- ஆம் ஆண்டில் 123,000 பேரும், 2024- இல் 252,000 பேரும், 2025- இல் 261,000 பேரும் திவால் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என தெங்கு இந்தான் புள்ளி விபரங்களைப் பகிர்ந்தார்.
நடப்பு 2026-ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மாதம் வரை 196,000 பேர் திவால் நிலையிலிருந்து விடுபட்டுள்ளனர்.
திவாலான நபர்கள் மலேசியத் திவால்நிலைத் துறையை அணுகப் பயப்படத் தேவையில்லை என்றும், விதிமுறைகளின்படி அவர்களின் நிதியை நிர்வகிக்க உதவுவதே தங்களின் கடமை என்றும் அவர் கூறினார்.
பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக திவால் நிலையிலேயே இருப்பதற்குக் காரணம், அவர்கள் திவால்நிலைத் துறையை நேரில் சந்தித்து வழக்குகளைக் கையாளாததும், மாதாந்திரத் தவணைகளைச் செலுத்தாததுமே ஆகும்.
இதற்கிடையில், ஒரு தனிநபரை திவாலானவராக அறிவிப்பதற்கான குறைந்தபட்ச கடன் வரம்பு, வரும் 2027 ஆம் ஆண்டு முதல் 100,000 ரிங்கிட்டிலிருந்து 150,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படவுள்ளது.
அக்டோபர் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2027 வரவுசெலவுத் திட்டத்தில் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரம்பு, திவாலாகும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கடன் சிக்கல்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள், நிலைமை மோசமடைவதற்கு முன்பாகத் தங்களின் நிதியை மறுசீரமைக்கவும், வங்கிகளுடன் கலந்தாலோசிக்கவும், கடன் ஆலோசனை மற்றும் கடன் மேலாண்மை (AKPK) அமைப்பின் உதவியை நாடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.




