கோலாலம்பூர், அக் 27 - ஆடைகள் வாங்குவதற்குப் பணம் மறுக்கப்படுவது, இணையம் மூலமாக பொருட்களை வாங்கியதற்காகக் கண்டிக்கப்படுவது அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக முற்றிலும் துணையைச் சார்ந்திருக்கக் கட்டாயப்படுத்தப்படுவது போன்ற சூழ்நிலைகள் குடும்பத்திற்குள் நடக்கும் பொருளாதார ஒடுக்குமுறைகளாகக் கருதப்படலாம்.
குடும்ப வன்முறை என்பது உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல்களுக்கு அப்பாற்பட்டது என்று மகளிர், குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.
பொருளாதாரக் கட்டுப்பாடுகள், பாதிக்கப்பட்டவரின் நல்வாழ்வையும் சுயநம்பிக்கையையும் பாதிக்கலாம்.
அடிப்படை குடும்பத் தேவைகளுக்கு ஒரு துணை, பணம் கொடுக்கத் தவறும் போது அல்லது தனிப்பட்ட செலவுகளைக் கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டவருக்கு நிதிச் சுதந்திரம் இல்லாமல் செய்யும் போது, அன்றாட சூழ்நிலைகளில் பொருளாதார ஒடுக்குமுறைகள் ஏற்படக்கூடும் ; எனவே இது கூடுதல் கவனத்திற்குரியதாகுமென அமைச்சர் கூறினார்.
இதுகுறித்து நேற்றிரவு பெர்னாமா தொலைக்காட்சியின் 'ருவாங் பிசாரா' கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நான்சி சுக்ரி பேசினார்.
ஒரு கணவன் வீட்டிற்கு வந்து தன் மனைவி சமைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது, அந்த மனைவி வேலைக்குச் செல்லாமல், சொந்தமாகப் பணமும் இல்லாமல் இருந்து, வீட்டுத் தேவைகளுக்கானப் பணத்தைக் கணவன் கொடுக்கத் தவறினால் அவளால் எவ்வாறு சமைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒரு மனைவி உடைகள் வாங்க விரும்பும் போது அதற்குரிய வசதி இல்லாததால் மற்ற பெண்களைப் போல அவரால் பொருட்களை வாங்க முடிவதில்லை என்றும், ஒருவேளை இணையத்தில் பொருட்களை ஆர்டர் செய்தால் கணவனால் திட்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது இன்று நம் வாழ்வில் ஒரு புதிய சவாலாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வருமானம் அல்லது பணப் புழக்கம் இல்லாதபோது, இத்தகைய நிதித் தடைகள் அவர்களின் சொந்தத் தேவைகளைப் பற்றிய முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தைப் பறித்துவிடும் என்றும் நான்சி மேலும் கூறினார்.
போலீஸ் புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2023-ஆம் ஆண்டில் 5,507 சம்பவங்களும், 2024-ஆம் ஆண்டில் 7,016 சம்பவங்களும், 2025-ஆம் ஆண்டில் 7,391 சம்பவங்களும் பதிவாகின.
நடப்பு 2026-ஆம் ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 5,278 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
குடும்ப வன்முறை பல்வேறு வடிவங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில் ஏற்படலாம் என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோராமல் அமைதியாக இருக்கத் தேர்ந்தெடுக்கும் போதுதான் சவால் எழுகிறது என்றும், சில சந்தர்ப்பங்களில் புகார் அளித்த பிறகும் பயத்தின் காரணமாக அவர்கள் அதைத் திரும்பப் பெறுகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய ஒடுக்குமுறையான சூழ்நிலைகளில் இருந்து தப்பித்து, தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அமைச்சு பல்வேறு வகையான ஆதரவை வழங்கி வருகிறது.
இதில் ஆலோசனை சேவைகள், தலையீட்டு நடவடிக்கைகள் மற்றும் தேவைப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான நிதி உதவி ஆகியவைகள் அடங்கும்.
வீட்டில் நடக்கும் வன்முறைகளைக் கண்டு வளரும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் குடும்ப வன்முறையைத் தடுப்பது இன்றியமையாதது என்று நான்சி வலியுறுத்தினார்.
ஏனெனில் இத்தகைய அனுபவங்கள் அவர்கள் வளரும்போது குடும்ப உறவுகளைப் பார்க்கும் விதத்தைப் பாதிக்கலாம்.
இப்படியான நடத்தைகளைக் காணும் குழந்தைகள், வளர்ந்த பிறகு அதை ஒரு சாதாரண விஷயமாகக் கருதி மீண்டும் அதையே செய்ய நாங்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
எனவே, பொதுமக்கள் குடும்ப வன்முறையை வெறும் தனிப்பட்ட குடும்ப விஷயமாகக் கருதாமல், தெரிந்த அல்லது சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் குறித்து 15999 என்ற எண்ணிற்கு 'தாலியான் காசிஹ்' மூலமாகவோ அல்லது 019-2615999 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி மூலமாகவோ உடனடியாகப் புகார் செய்யுமாறு நான்சி வலியுறுத்தினார்.



