ஷா ஆலாம், அக் 26 - 2027 வரவு செலவுத் திட்டத்தில் செல்லப்பிராணிகளின் பராமரிப்புச் செலவுக்கு வழங்கப்படிருக்கும் வரி விலக்கு, உரிமையாளர்கள் தங்களது பிராணிகளை பொறுப்புடன் வளர்ப்பதை ஊக்குவிக்கும்.
குறிப்பாக, பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதையும் மலடாக்குவதையும் முறைப்படி மேற்கொள்வதை உறுதிச் செய்யுமென , மலேசிய கைவிடப்பட்ட பிராணிகள் சங்கத்தின் (SAFM) தலைவர் கலைவாணன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

செல்லப் பிராணிகளுக்கான தடுப்பூசி செலவு மற்றும் பதிவு செய்யப்பட்ட மையங்களில் இருந்து பிராணிகளைத் தத்தெடுக்கும் செலவு ஆகியவற்றுக்கு தனிநபர் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என 2027 வரவு செலவுத் திட்டத் தாக்கலின்போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
அந்தச் செலவுகள் அனைத்தும் புத்தகங்கள், கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையச் சந்தாக்கள் போன்ற பிற வாழ்க்கை முறைச் செலவுகளுடன் சேர்த்து மொத்தமாக 2,500 ரிங்கிட் வரம்பிற்குள் அனுமதிக்கப்படும்.
இத்தகைய சலுகைகள் தடுப்பூசி மற்றும் மலடாக்குதலை ஒரு சாதாரண செலவாகப் பார்க்காமல், பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பின் முக்கியப் பகுதியாக மாற்றும் என்று கலைவாணன் குறிப்பிட்டார்.
மேலும், மருத்துவச் செலவுகளுக்குப் பயந்து சிகிச்சையைத் தள்ளிப்போட்ட உரிமையாளர்களுக்கு இது ஒரு சிறந்த ஊக்கமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும் வெளியில் சுற்றித் திரியும் அல்லது கைவிடப்பட்ட பிராணிகள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் இன்னும் சில கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, அடிப்படை உடல்நலப் பரிசோதனைகள், கால்நடை சிகிச்சைகள் மற்றும் பிராணிகளை அடையாளம் காண உதவும் மைக்ரோசிப்பிங் போன்றவற்றுக்கும் இந்த வரி விலக்கை நீட்டிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் தெருக்களில் வாழும் ஆதரவற்ற பிராணிகளுக்கான மலடாக்கம் மற்றும் தடுப்பூசித் திட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்றும், பிராணிகள் நலத் திட்டங்களுக்காக ஆண்டுக்குக் குறைந்தது 30 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஆரம்ப ஒதுக்கீட்டுடன் ஒரு தேசிய பிராணிகள் நல நிதியை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





