2027-இல் நிதியுதவித் தகுதிக்கு 'நிகர வருமானம்' அளவுகோளாகப் பயன்படுத்தப்படும்

26 அக்டோபர் 2026, 7:27 AM
2027-இல்  நிதியுதவித் தகுதிக்கு 'நிகர வருமானம்' அளவுகோளாகப் பயன்படுத்தப்படும்

கோலாலம்பூர், அக் 26 : 2027-ஆம் ஆண்டு முதல் அரசாங்க உதவிகளைப் பெறுவதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் 'நிகர வருவாய்'(Net Disposable Income - NDI) அணுகுமுறையை அமல்படுத்தவுள்ளது.

இந்த புதிய முறை, குடும்பங்களின் மொத்த வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது, வேலை, இருப்பிடம் போன்ற காரணங்களையும் மற்றும் அத்தியாவசியப் பொறுப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

எனவே, இந்த அணுகுமுறை மிகவும் நியாயமானதாக இருக்குமென பொருளாதார துணை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாஹார் அப்துல்லா தெரிவித்தார்.

மக்களவையில் ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினரின் துணைக்கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் அவ்வாறு கூறினார்.

மலேசிய புள்ளிவிவரத் துறையின் 2024-ஆம் ஆண்டு வீட்டு வருமானக் கணக்கெடுப்பின்படி, நடுத்தர வர்க்கத்தினரின் மாத மொத்த வருமானம் RM5,860 முதல் RM12,679 வரை உள்ளதுடன், அவர்களின் சராசரி வருமானம் மாதத்திற்கு RM8,744 ஆக உள்ளது.

இருப்பினும், நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்தில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அத்தியாவசியச் செலவுகளுக்கே சென்றுவிடுகிறது.

இதில் உணவிற்காக 34.1 விழுக்காடும், வீட்டுவசதி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்காக 22.7 விழுக்காடும், போக்குவரத்திற்காக 10.6 விழுக்காடும் செலவழிக்கப்படுகிறது.

இவற்றுடன் மருத்துவப் பாதுகாப்புக்கான செலவுகளையும் செலுத்திய பிறகு, மாத இறுதியில் அவர்களிடம் எஞ்சியிருக்கும் பணம் மிகக் குறைவாகவே உள்ளது.

இந்த வருமான வரம்புகள் ஐந்து ஆண்டுகளுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படும் வேளையில், அடுத்த கணக்கெடுப்பு 2027-இல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் 2028-இல் வெளியிடப்படும்.

புதிய மதிப்பீட்டு முறை அமலுக்கு வரும் வரை, 2027 வரவு செலவுத் திட்டம் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் சுமையைக் குறைக்க கல்வி, வீட்டுவசதி, வரி போன்ற துறைகளில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், BUDI95 மற்றும் ஆரம்பப்பள்ளி உதவித்தொகை போன்ற திட்டங்கள் பொதுவான முறையில் அவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.