ஊடகவியலாளர் நல நிதி:2023 முதல் RM2.61 மில்லியன் உதவித் தொகையுடன் 886 பேருக்கு உதவி

26 அக்டோபர் 2026, 1:56 AM
ஊடகவியலாளர் நல நிதி:2023 முதல் RM2.61 மில்லியன் உதவித் தொகையுடன் 886 பேருக்கு உதவி

கோலாலம்பூர், அக் 26: 2023 ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்-பட்டதில் இருந்து, நாடு முழுவதும் மொத்தம் 886 ஊடகவியலாளர்கள் 'தபுங் காசி@ஹவானா' (Tabung Kasih@HAWANA) நிதி மூலமாகப் பயனடைந்துள்ளனர்.

அந்த நிதியின் மூலம் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த உதவித்தொகை 26 லட்சத்து 12,790 ரிங்கிட்டை எட்டியுள்ளது.

ஊடகவியலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் தகவல் தொடர்பு அமைச்சு எப்போதும் அக்கறை காட்டி வருவதாகவும், அதன் காரணமாகவே தேவையுள்ளவர்களுக்கு உதவ இந்த நிதி உருவாக்கப்பட்டது என்றும் தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

"எனவே, இந்த நிதியின் மூலம் உதவி தேவைப்படுபவர்கள், தயவுசெய்து எனது அலுவலகத்தையோ அல்லது மலேசிய தேசிய செய்தி நிறுவனத்தையோ (பெர்னாமா) தொடர்பு கொள்ளவும், ஏனெனில் பெர்னாமா தான் இந்த நிதியின் செயலகமாகச் செயல்படுகிறது. ஊடக நண்பர்களுக்கு சிறந்த உதவிகளை வழங்க பெர்னாமாவும் அமைச்சும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யும்," என்று நேற்று கோலாலம்பூர் கோபுரத்தில் நடைபெற்ற 'மின்னல் எஃப்எம்' ஊடகப் பாராட்டு விழாவில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் டெலிகாம் மலேசியாவுடன் (TM) ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்பிற்கு பிறகு, 'தபுங் காசி@ஹவானா எக்ஸ் டிஎம்' (Tabung Kasih@HAWANA X TM) திட்டத்தின் கீழ் 116 ஊடகவியலாளர்கள் 3 லட்சத்து 61,300 ரிங்கிட் மதிப்பிலான உதவிகளைப் பெற்றுள்ளனர் என்று தியோ கூறினார்.

'தபுங் காசி@ஹவானா எக்ஸ் டிஎம்' என்பது, டிஎம் நிறுவனத்தின் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியின் மூலம், உதவி தேவைப்படும் மேலும் பல ஊடகவியலாளர்களுக்கு ஆதரவை விரிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும்.

முன்னதாக, மின்னல் எஃப்எம்' ஊடகப் பாராட்டு விழாவில் , உடல்நலக் குறைவு மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஏழு ஊடகவியலாளர்களுக்கு 'தபுங் காசி@ஹவானா எக்ஸ் டிஎம்' திட்டத்தின் மூலமாக நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

அவர்களில் நால்வர் விழாவில் நேரடியாகக் கலந்துகொண்டு உதவியைப் பெற்றனர், மற்ற மூவர் பெர்னாமா வழியாகப் பெற்றுக்கொள்வர்.

நிதியுதவி பெற்றவர்களில் திசைகள் உதவி தயாரிப்பாளர் எஸ். முருகேசன், வணக்கம் மலேசியா முன்னாள் ஆசிரியர் கே. பத்மநாபன், மீடியா பிரிமா பகுதிநேர கேமரா ஒளிப்பதிவாளர் ஏ.அமுதன், தமிழ் மலர் முன்னாள் ஆசிரியர் கே.மணியம், மலேசிய நண்பன் முன்னாள் செய்தியாளர் ஏ.எஸ். ராஜேஸ்வரன், மலேசிய வானொலி தொலைக்காட்சி (RTM) நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரிதா மற்றும் RTM கேமரா ஒளிப்பதிவாளர் நொர்பாஸ் ரீன் எஸ்னி ஒன் ஆகியோர் அடங்குவர்.

'தபுங் காசி@ஹவானா' நிதி, தகவல் தொடர்பு அமைச்சின் கீழ் வழிநடத்தப்பட்டு, உடல்நலம் மற்றும் நிதி நெருக்கடிகள் உட்பட பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு உதவும் வகையில் பெர்னாமா மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இதனிடையே, உடல்நலக் குறைவு, முதுமை அல்லது அவசர நிலைகளை எதிர்கொள்ளும் மூத்த கலைஞர்கள் மற்றும் கலைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (ஃபினாஸ் - FINAS) கீழ் 'சியாரஹ் செனி மதானி@ஃபினாஸ்' (Ziarah Seni MADANI@FINAS) திட்டத்தைத் தகவல் தொடர்பு அமைச்சு தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக தியோ குறிப்பிட்டார்.

2023 முதல் கடந்த அக்டோபர் 25 வரை, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 250 கலைத்துறையினர் பயனடைந்துள்ளனர் என்றும், இதன் ஒட்டுமொத்த உதவித்தொகை RM180,700 ஆகும் என்றும் அவர் கூறினார்.

அதே விழாவில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தியக் கலைத்துறையினரின் நலன் மீதான அக்கறையின் அடையாளமாக, ஐந்து இந்தியக் கலைஞர்களுக்கும் தியோ நிதியுதவிகளை வழங்கினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.