சென்னை, அக் 25 : பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவால் இன்று (அக்.25) காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக மக்களிடையே பிரபலமான சமையல் கலைஞராக அறியப்படும் செஃப் தாமு, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்.
குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களைப் பெற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
உணவக் மேலாண்மை மற்றும் சமையல் கலை தொழில்நுட்பப் பிரிவில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்ற முதல் இந்திய சமையல் கலைஞர் செஃப் தாமு ஆவார்.
கடந்த 2010- ஆம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 விநாடிகளில், 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனைப் படைத்தார்.
சமையல் துறையில் இவரது 40 ஆண்டுகளுக்கும் மேலான சேவையைப் பாராட்டி, மத்திய அரசு 2025-ஆம் ஆண்டு தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது.
செப் தாமுவின் உடல் சென்னை, கோடாம்பக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.



