கோலாலம்பூர், அக் 24 : நேற்று பங்சார், அப்துல்லா ஹுக்கும் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவல் மற்றும் விசாரணையின் அடிப்படையில், 23 வயதுடைய ஆடவர் ஒருவரும் 31 வயதுடைய பெண் ஒருவரும் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாதில் மார்சூஸ் தெரிவித்தார்.
"அவர்கள் இருவரும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நாங்கள் நம்புகிறோம், இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
மேலும், குற்றவாளிகளைக் கண்டறிய உதவிய பொதுமக்களின் தகவல்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று இன்று ஜாலான் பீல், லக்சமணா பிபிஆர் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கைதான இருவரும் தம்பதியரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அது இன்னும் விசாரணையில் இருப்பதாக ஃபாதில் கூறினார்.
முன்னதாக, ஆலாம் ஃபுளோரா தூய்மைப் பணியாளர்கள் அப்துல்லா ஹுக்கும் அருகிலுள்ள கழிவு அகற்றும் பகுதியில் அந்த குழந்தையின் உடலைக் கண்டெடுத்தனர்.
அக்குழந்தை சுமார் ஏழு மாதக் கருவாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.



