தென் கொரியர்களைக் குறி வைத்து செயல்பட்ட மோசடி மையம் முறியடிப்பு

24 அக்டோபர் 2026, 4:58 AM
தென் கொரியர்களைக் குறி வைத்து செயல்பட்ட மோசடி மையம்  முறியடிப்பு

ஷா ஆலாம், அக் 24 - போலி முதலீட்டுத் திட்டங்கள் மூலம் தென் கொரியர்களை ஏமாற்றி வந்த போலி அழைப்பு மையத்தை குடிநுழைவுத் துறை, அதிரடியாக சோதனையிட்டு 34 பேரைக் கைது செய்தது.

அந்தச் சோதனையின் போது, 3 லட்சத்து 18, 600 ரிங்கிட் மதிப்புள்ள மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த மோசடி கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக, குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி கடந்த மூன்று மாதங்களாகப் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி வந்துள்ளதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.

அதிகாரிகளின் பார்வையில் படாமல் தப்பிப்பதற்காக ஒரு விடுமுறை இல்லத்தை (homestay) இந்த மோசடி கும்பல் தனது ரகசிய கட்டுப்பாட்டு மையமாகப் பயன்படுத்தியுள்ளது.

அங்கு வேலை செய்தவர்களுக்கு, வாடிக்கையாளர் சேவை, முதலீடு தொடர்பான தகவல்களை நிர்வகித்தல் மற்றும் வாடிக்கையாளர் தரவைப் பராமரித்தல் என மூன்று முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்தச் சோதனையில் சீனாவைச் சேர்ந்த 31 பேரும், தைவானைச் சேர்ந்த ஓர் ஆணும் மற்றும் இரு உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைதான வெளிநாட்டினரிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும், சிலர் தங்களது தங்கும் அனுமதியைத் தாண்டி சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததும் முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரு உள்ளூர் ஆடவர்கள் அந்த வளாகத்தைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களைக் கண்காணிப்பதற்கும் தலா மூவாயிரம் ரிங்கிட் பணம் பெற்றுக்கொண்டு வேலை நேரத்தின் போது பணியாளர்களுக்குத் தேவையான உணவுகளை விநியோகம் செய்துள்ளனர்.

அங்கிருந்து 309 கைபேசிகள், 45 கணினிகள், பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்ற வழிமுறைகள் அடங்கிய 21 குறிப்பேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக புத்ராஜெயா குடிநுழைவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.