சிரம்பான், அக். 20 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) அரசு குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS) பெண் அதிகாரியின் மரணம் தொடர்பான விசாரணையில் இதுவரை 18 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள், விரைவில் துணை அரசு வழக்கறிஞரிடம் (DPP) சமர்ப்பிக்கப்படும் என நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
இவ்வழக்கில் சந்தேக நபராகக் கருதப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர், குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் எதிர்வரும் அக்டோபர் 22ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபருக்கு எதிராக இதற்கு முன்னர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 16 பழைய பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அல்ஸாஃப்னி குறிப்பிட்டார்.
30 வயதைக் கடந்த அந்தப் பெண், நெகிரி செம்பிலான், நீலாயில் அமைந்துள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய அரசு குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவர் அவரைக் கத்தியால் குத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உயிரிழந்த பெண்ணின் கணவர், சிலாங்கூரில் செப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கி காவல் நிலையத்தில் சரணடைந்ததுடன், பெண்ணின் மரணம் குறித்தும் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.







