சென்னை , அக் 17 - இசையமைப்பாளரும் பாடகருமான தேவா காலமானார். அவருக்கு வயது 75.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அவர் காலமானார்.
தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. இவர் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த ஓர் இடம் பிடித்த முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார்.
சென்னையின் பட்டிதொட்டிகளில் மட்டும் ஒலித்து வந்த கானா பாடல் இசையை, திரையிசைப் பாடல்கள் மூலம் உலகப்புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பெருமை இவரைச் சாரும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.
கடந்த 1989-ஆம் ஆண்டு வெளிவந்த 'மனசுக்கேத்த மகாராசா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா, அண்ணாமலை, பாட்ஷா உள்பட சுமார் 400-க்கும் மேலான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த 90-களில் தமிழ் சினிமா இசையில் இளையராஜாவும், ஏ.ஆர் ரஹ்மானும் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்குத் தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேவா, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
அவரது இந்த திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



