ஷா ஆலாம், அக் 17 - பெட்டாலிங் ஜெயாவில், மூடிய இடத்தில் தனித்திருந்த (கல்வாத்) விவகாரம் தொடர்பாக, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையினால் (JAIS) கைது செய்யப்பட்ட நபர்களில் தாமும் ஒருவர் என்பதை பெர்சாமா (BERSAMA) இணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் உறுதிப்படுத்தினார்.
அந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 15 -ஆம் தேதி நடந்ததாக நிக் நஸ்மி ,இன்று வெளியிட்டட ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
முன்னதாக கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் நகரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அவரது நண்பர்களுடன் தொடங்கிய ஆரம்பகட்ட விவாதம், பின்னர் அவர்கள் விவாதித்து வந்த ஒரு திட்டம் தொடர்பான சில பொருட்களை ஆராய்வதற்காக பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் இடத்திற்குத் தொடரப்பட்டதாக அவர் கூறினார்.
"JAIS அதிகாரிகள் அங்கு வந்தபோது, நானும் அந்தப் பெண்ணும் மட்டும்தான் இருந்தோம் என்பது உண்மைதான். அது ஒரு தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
இருப்பினும், அந்தச் சோதனையின் போது தாங்கள் எந்தவொரு ஒழுக்கக்கேடான செயலிலும் ஈடுபடவில்லை என்று அவர் கூறினார்.
"JAIS அதிகாரிகளிடம் நான் தெரிவித்ததைப் போலவே, நாங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை," என்று அவர் மேலும் விளக்கினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிக் நஸ்மி தனது மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அந்த நேரத்தில் தான் எடுத்த தவறான முடிவால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தனது செயல்களால் ஏமாற்றமடைந்த பெர்சாமா கட்சி, அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமும் அவர் மன்னிப்பு கோரியதுடன், இந்த விவகாரம் கட்சியின் தோற்றத்தை எதிர்மறையாகப் பாதித்துள்ளதை ஒப்புக்கொண்டார்.
கட்சி எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும், எந்தவொரு சட்ட நடைமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் வலியுறுத்தினார்.







