தலை மற்றும் ஒரு கை இல்லாத நிலையில் கால்வாயில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு

16 அக்டோபர் 2026, 5:28 PM
தலை மற்றும் ஒரு கை இல்லாத நிலையில்  கால்வாயில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு

கோலா பெராங், அக்டோபர் 16: கோலா பெராங், பாடாங் செத்தெங்ஙே கிராமத்தில் (Kampung Padang Setengge) உள்ள ஒரு வீட்டின் பின்புற கால்வாயில் , தலை மற்றும் ஒரு கை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 6.52 மணிக்கு போலிசுக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது என உலு திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டண்ட் ஷாருடின் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

தனது வீட்டின் பின்பகுதியில் பெண் ஒருவர் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது, கால்வாயில் ஏதோ ஒரு உருவம் கிடப்பதைக் கண்டுள்ளார்.

உற்றுப் பார்த்தபோது அது ஒரு குழந்தையின் உடல் என்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து பாடாங் செத்தெங்ஙே கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு வாரியத்திற்கு (JPKK) தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் போலிசுக்கு புகார் அளிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் தலை இல்லாமலும், ஒரு கை இல்லாத நிலையிலும் மிக மோசமாகக் காணப்பட்டது.

தற்போதைய நிலையில் அந்தக் குழந்தையின் பாலினம் (ஆணா, பெண்ணா) என்ன அல்லது எந்த நாட்டுரிமையைக் கொண்டது என்பதைப் போலீசாரால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் (HSNZ) தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்களைச் சேகரிக்கவும், விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவும் திரெங்கானு மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த D10 தடயவியல் பிரிவு மற்றும் மோப்ப நாய் (K9) பிரிவு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.