ஷா ஆலாம், அக் 15 : சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு மாவட்டக் கல்வி அலுவலகங்களின் (PPD) கீழ் வரும் அனைத்துப் பள்ளிகளும் நாளை (அக்டோபர் 16) மூடப்படும்.
கிள்ளான் (Klang), கோலா சிலாங்கூர் (Kuala Selangor), கோலா லங்காட் (Kuala Langat), உலு லங்காட் (Hulu Langat), கோம்பாக் (Gombak), செப்பாங் (Sepang), பெட்டாலிங் பெர்டானா (Petaling Perdana) மற்றும் பெட்டாலிங் உத்தாமா (Petaling Utama) ஆகிய மாவட்டக் கல்வி அலுவலகங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகள் இந்த மூடல் அறிவிப்பில் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில கல்வித் துறை தெரிவித்தது.
இருப்பினும், உலு சிலாங்கூர் (Hulu Selangor) மற்றும் சபாக் பெர்னாம் (Sabak Bernam) ஆகிய மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.
ஆனால், அவ்விரு மாவட்டங்களிலும் வகுப்பறைக்கு வெளியிலான அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது.
"பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கல்வித் துறையினர் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறும், புதிய தகவல்களைப் பெற சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் (JPNS) அதிகாரப்பூர்வ ஊடகப் பக்கங்களைப் பார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
"பள்ளிகள் இயங்கும் முறையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலமாக அறிவிக்கப்படும்," என்று மாநில கல்வித் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.



