கோலாலம்பூர், அக் 15 : 2027- இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'ஸ்பீட் சிலாங்கூர் 2.0' (Speed Selangor 2.0) திட்டம், சைபர் ஜெயா மற்றும் எல்மினா (Elmina) ஆகிய பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளை எளிதாக்கிய தற்போதைய திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை மேலும் விரைவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அமலில் உள்ள 'ஸ்பீட் சிலாங்கூர்' திட்டத்தின் சாதனைகளில் ஒன்றாக, சைபர் ஜெயாவில் உள்ள தரவு மைய திட்டத்திற்கு ஐந்து நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கப்பட்டது என்று சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் (UPEN) ஊராட்சி தரப்பு பிரிவின் துணை இயக்குநர் நோரஸ்லினா யூசோப் தெரிவித்தார்.
"மேலும், எல்மினா மேம்பட்ட தளவாட மையத்தின் (Advanced Logistics Hub) மேம்பாட்டிற்கு ஏழு நாட்களிலும், எல்மினா தொழிற்துறை பூங்காவில் இரு தரவு மையங்களுக்கு ஒன்பது நாட்களிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (SIBS) ஒரு பகுதியான, சிலாங்கூர் முதலீட்டு அரங்கில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த முயற்சி குறிப்பாக உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முதலீட்டு வளர்ச்சியை ஆதரிக்கும் முக்கிய திட்டங்களில் கவனம் செலுத்துகிறது என நோரஸ்லினா தெரிவித்தார்.
"தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் தளவாட வசதிகள் (logistics facilities) ஆகியவை உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலித் துறைகளுக்கு முக்கியமான உள்கட்டமைப்புகளாக இருப்பதால், இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது."
"வணிக ரீதியிலான பிரிவில் , இந்தத் திட்டம் தனியார் மருத்துவமனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது," என்று அவர் கூறினார்.
திட்டமிடல் அனுமதி ஒப்புதலுக்கான காத்திருப்பு காலத்தைக் குறைப்பது, விண்ணப்ப நடைமுறைகளை தரப்படுத்துவது மற்றும் சேவை வழங்கல் திறனை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு 'ஸ்பீட் சிலாங்கூர்' செயல்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

"ஆரம்பகட்ட மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு 21 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் திட்டத்திற்கான தகுதி சரிபார்ப்பு மற்றும் ஆதரவு ஆவணங்களின் முழுமைத்தன்மை ஆகியவை அடங்கும்."
"விண்ணப்பத்தை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும் செயல்முறை ஒன்பது நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் மேம்பாட்டு ஒப்புதல்கள் மற்றும் வணிக உரிமம் வழங்கும் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்காக 2025 அக்டோபர் 8 அன்று 'ஸ்பீட் சிலாங்கூர்' தொடங்கப்பட்டது.
மாநிலத்தில் உள்ள அனைத்து 12 ஊராட்சி தரப்புகளையும் உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் முழுமையான விண்ணப்பங்களுக்கு அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த செயல்முறைக்கு மூன்று முதல் 12 மாதங்கள் வரை காலம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



