கோலாலம்பூர், அக் 15 - கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் நான்கு சிலைகளை உடைத்தது தொடர்பில் , விசாரணைக்கு உதவ ஆர்வலர் தாமிம் தஹாரி அப்துல் ரசாக் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அம்மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் பெரானாங்கில் கைது செய்யப்பட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சூஸ் தெரிவித்தார்.
மூன்று நாள் தடுப்புக் காவலுக்குப் பின் அவர்கள் மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தொடக்க விசாரணையில், அவ்வாலயத்தில் இருந்த 4 வழிபாட்டு சிலைகள் உடைக்கப்பட்டது தெரிய வந்தது. சேத மதிப்பு இன்னும் தெரிய வரவில்லை.
மேலும், இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக் ஷன் 295 -இன் கீழ் விசாரிக்கப்பட்டதாக டத்தோ ஃபாடில் மர்சூஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை, மேற் நடவடிக்கைகாக, சிலாங்கூர் மாநில பதிவக அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கோயிலின் சில சிலைகள் உடைக்கப்பட்டதாக காண்பிக்கப்படும் காணொளி வைரலானதை அடுத்து, போலீசார் அச்சம்பவத்தை விசாரிக்கும்படி மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் வலியுறுத்தியிருந்தார்.



