ஷா ஆலாம், அக்.15 - கடந்த சனிக்கிழமை, கோலாலம்பூர் ஜாலான் கூச்சிங்கில் ஐந்து வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமான வகையில், ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியது உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை, BYD மின்சார கார் ஓட்டுநர் எதிர்நோக்கியுள்ளார்.
கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் அலியா அன்வார் முன்னிலையில், வங்கி அதிகாரியான 24 வயதுடைய ரேவன் கோ வே ஹோர் மீது அந்த குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து அந்த ஆடவர் விசாரணை கோரியுள்ளார்.
இம்மாதம் அக்டோபர் 10-ஆம் தேதி பிற்பகல் 3.44 மணியளவில், ஜாலான் கூச்சிங்கில், நகரின் மையப்பகுதியிலிருந்து செகாமட் நோக்கிச் செல்லும் பாதையில், BYD சீல் காரை ஆபத்தான முறையில் ஓட்டி ஆசியா அஹ்மாட் ஷாஹிர் என்ற ஐந்து வயது சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக , அவர் மீது முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.
அதே இடத்தில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக பிரிவு 42(1)-இன் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டும், விபத்து நடந்த பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறியதற்காக பிரிவு 52(1)-இன் கீழ் மூன்றாவது குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமட் ஃபத்லி முகமட் ஜம்ரி 50,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையை கோரினார்.
எனினும், பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் கைலாஷ் சர்மாவின் வாதத்தை ஏற்று, நீதிமன்றம் 36,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையுடன் ரேவன் கோ-வின் தந்தையை உத்தரவாத நபராக ஏற்க அனுமதித்தது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் வழக்கு முடியும் வரை உடனடியாக முடக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடப்பிதழும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட ஆவண சமர்ப்பிப்பு வரும் நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.



