கோலாலம்பூர், அக் 15 - ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பணிவேகத்தை அதிகரித்தாலும், உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு முன்பு மனிதர்களின் சரிபார்ப்பும் திருத்தமும் தொடர்ந்து அவசியமானது என மீடியா சிலாங்கூரின் தலைமை செயல்முறை அதிகாரி மொஹமெட் ஃபாரீட் மொஹமெட் அஷாரீ தெரிவித்தார்.
" செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேலைச் செயல்முறைகளை விரைவுபடுத்துகிறது; ஆக்கப்பூர்வமான உள்ளடக்கங்களை அதிகளவில் உருவாக்கித் தருவதிலும் பெரிதும் உதவுகிறது.
எனினும் தகவல்களின் துல்லியத்தன்மையை உறுதி செய்வதற்கு மனிதர்களின் இறுதித் திருத்தமும் சரிபார்ப்பும் மிகவும் முக்கியம். குறிப்பாக, போலித் தகவல்கள் பரவி வரும் தற்போதைய சவாலான சூழலில் ஊடகங்களின் நம்பகத்தன்மை என்பது அவர்கள் வெளியிடும் செய்திகளின் உண்மைத்தன்மையை முழுமையாகச் சரிபார்ப்பதிலேயே உள்ளது " என மொஹமெட் ஃபாரீட் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) ' 2026 சிலாங்கூர் டெக்ஸ்பியர் உச்சநிலை மாநாட்டின் ' ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'செயற்கை நுண்ணறிவு ஊடகங்களில் நம்பிக்கை, பதிப்புரிமை மற்றும் படைப்பாற்றலின் எதிர்காலம்' என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இதனை வலியுறுத்தினார்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து சமநிலைப்படுத்தும் ஊடகங்களின் முக்கியப் பணியை எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.
பொதுமக்கள் ஊடக அறிக்கைகளின் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளவும், சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பொறுப்பை நிலைநாட்டவும் இந்த கண்காணிப்புப் பணி தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
அதே வேளையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக , நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அக்டோபர் 17 -ஆம் தேதி வரை நடைபெறும் சிலாங்கூர் வர்த்தக உச்சநிலை மாநாட்டினை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்
சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் , தாய்லாந்து, இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளின் பங்களிப்புடன் மொத்தம் 526 கண்காட்சி முகப்பிடங்கள் இந்த மாநாட்டின் நெடுகே இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



