கோலாலம்பூர்,அக் 14: சிலாங்கூர், மலிவான உழைப்பைத் தேடும் முதலீட்டாளர்களுக்கான இடமல்ல;
மாறாக நீண்ட கால பங்காளித்துவம் மற்றும் மலேசியாவின் மிகச்சிறந்த ஆட்பலத் திறன்களைத் தேடுபவர்களுக்கான இடம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC), சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (SIBS) தொடக்க விழாவில் வரவேற்புரையாற்றிய போது அவர் அதனைத் தெரிவித்தார்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கை என்பது கொள்கை நிலைத்தன்மை மற்றும் தீர்க்கமான நிர்வாகத்தில் தான் அடங்கியுள்ளது என்றார்.
"தொழில் அதிபர்களாகிய நீங்கள் உங்கள் பணத்தைப் பாதுகாப்பான, நிலையான மற்றும் வளர்ச்சிக்கு இடமுள்ள ஓர் இடத்தில் முதலீடு செய்யவே விரும்புவீர்கள். அரசாங்கமாக நாங்களும் இதை உணர்ந்துள்ளோம். எங்களுக்கும் எங்களது மக்களிடம் முதலீடு செய்யக்கூடிய நம்பகமான பங்காளிகளே தேவை.
நீங்கள் மலிவான நிலத்தையோ அல்லது மலிவான தொழிலாளர்களையோ தேடினால் அதற்கு சிலாங்கூர் உகந்த இடமல்ல.
ஆனால், நீங்கள் நீண்ட கால பங்காளித்துவத்தை உருவாக்கவும், மலேசியாவின் சிறந்த அறிவார்ந்த பணியாளர்களைப் பயன்படுத்தவும் விரும்பினால் சிலாங்கூரை நோக்கி வாருங்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே , பொருளாதார மீட்சியை தனித்து உருவாக்க முடியாது என குறிப்பிட்ட அமிரூடின் ஷாரி, வட்டாரத்துவ நாடுகள் தங்களுக்குள் போட்டியிடுவதை விடுத்து ஒன்றிணைந்து செயல்படும் போது உண்மையான செழிப்பு சாத்தியமாகும் என்று சுட்டிக்காட்டினார்.
680 மில்லியனுக்கும் அதிகமான இளம் மற்றும் துடிப்பான மக்கள் தொகையைக் கொண்ட ஆசியான் வட்டாரம் , உலகப் பொருளாதார வளர்ச்சியின் மையப்புள்ளியாக வேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.
எனவே, புதிய உறுப்பினரான திமோர் லெஸ்தே உட்பட இவ்வட்டாரத்தில் உள்ள 11 நாடுகளும் பயன்பெறும் வகையில் கூட்டு வளர்ச்சியை அடைய ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும், அந்த முயற்சியில் சிலாங்கூர் உட்பட மலேசியா முன்னிலை வகிக்கத் தயாராக உள்ளதாகவும் அமிருடின் ஷாரி தனது உரையில் குறிப்பிட்டார்.





