ஷா ஆலாம், அக் 14: சிலாங்கூர் மாநிலத்தை ஒரு போட்டித்தன்மை மிக்க சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கத்தில், '2026-2030 சிலாங்கூர் சுற்றுலா முதன்மைத் திட்டம் வரையப்பட்டுள்ளது.
அத்திட்டம், ஒன்பது உத்திகள் மற்றும் 42 செயல் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
அந்த முதன்மைத் திட்டம் இரு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.
முதலாவது, அதிக செலவு செய்யும் ஆற்றல் கொண்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, அவர்கள் தங்கும் காலத்தை நீட்டிக்கும் வகையில் உயர்தர மற்றும் பிரத்தியேக அனுபவங்களுடன் சிலாங்கூரை ஒரு மதிப்புமிக்க சுற்றுலாத் தலமாக மாற்றுவதாகும்.
இரண்டாவது, மருத்துவ சுற்றுலா, குடும்பப் பொழுதுபோக்கு மற்றும் மாநாடுகள், கண்காட்சிகள் ஆகிய துறைகளின் மூலம் மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சியை உந்துவதாகும்.
இத்திட்டத்தின் கீழ், சிலாங்கூர் மாநிலம் 92 லட்சம் முதல் 1 கோடியே 36 லட்சம் வரையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
அத்துடன் ஹோட்டல் தங்குமிடங்களின் விகிதத்தை 55.2 விழுக்காட்டிலிருந்து 69.6 விழுக்காடு வரை உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 முதல் 2030 வரையிலான மூன்று கட்டங்களை உள்ளடக்கிய இந்த ஐந்து ஆண்டு கால திட்டத்திற்காக 4 கோடியே 91 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-2030 சிலாங்கூர் சுற்றுலா முதன்மைத் திட்டத்தின் 9 முக்கிய உத்திகள் :
• உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சுற்றுலா: மலிவு விலையில் தரமான சேவைகளை வழங்கி, சிலாங்கூரை உலகத்தரம் வாய்ந்த மருத்துவ- நல்வாழ்வு மையமாக வலுப்படுத்துதல்.
• அனைத்துலக மாநாட்டு மையம் : சிலாங்கூரை அனைத்துலக அளவிலான, அதிக தாக்கம் கொண்ட மற்றும் புதுமையான மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கான மையமாக நிலைநிறுத்துதல்.
• குடும்ப சுற்றுலா தயாரிப்புகள்: கல்வி, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் இயற்கை சூழலியல் சார்ந்த குடும்பச் சுற்றுலா தயாரிப்புகளை மேம்படுத்தி பயணிகளின் அனுபவத்தை வளப்படுத்துதல்.
• சமூக மேம்பாட்டை வலுப்படுத்துதல்: சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் சமூகத்தின் தீவிரப் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
• அனைத்துலக அங்கீகாரம் மற்றும் முத்திரை: சிலாங்கூரின் சுற்றுலாப் பிம்பத்தை உலக அரங்கில் வலுவான முத்திரையாக மாற்ற அனைத்துலக அங்கீகாரங்களைப் பெறுதல்.
• சிறப்பு சுற்றுலா முதலீட்டு மண்டலம் : புதுமையான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் அதிக தாக்கம் கொண்ட சுற்றுலா தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்தியாக இந்த முதலீட்டு மண்டலத்தை மாற்றுதல்
• டிஜிட்டல் உருமாற்றம்: ஸ்மார்ட் சுற்றுலாவை (Smart Tourism) மேம்படுத்துவதற்காக ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
• சுற்றுலா சந்தைப்படுத்தல்: சிலாங்கூரின் புகழையும் அனைத்துலக சுற்றுலாத் தலமாக அதன் அடையாளத்தையும் மேம்படுத்த சுற்றுலா சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்களை வலுப்படுத்துதல்.
• சுற்றுலா மேலாண்மை நிர்வாகம்: ஆற்றல்மிக்க, திறமையான , புதுமையான மேலாண்மை அமைப்பை உருவாக்க சுற்றுலாத் தலங்களின் நிர்வாக ஆளுமையை மேம்படுத்துதல்.



