ஷா ஆலாம், அக் 14: இன்று காலை புஞ்சாக் ஆலாம், செக் ஷன் U10, ஆலாம் அவானா தொழிற்பேட்டையின் ஜாலான் U10/99 சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கல லாரியின் பின்புறத்தில், பெரோடுவா மைவி காரொன்று மோதியதில் அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காலை சுமார் 8 மணியளவில் நடந்த அந்தச் சம்பவத்தில், 20 வயது மதிக்கத்தக்க அந்த ஓட்டுநர் காரின் இருக்கையில் சிக்கிக் கொண்டதோடு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த விபத்து குறித்து காலை 8.14 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் துணை இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் மற்றும் இரு வாகனங்கள் சுமார் 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்ட பின்னர், அவர் இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.



