புத்ராஜெயா, அக் 14: மியான்மார் தனது அகதிகளை மீண்டும் ஏற்றுக்கொள்வதை உறுதி செய்த உலகின் முதல் நாடு மலேசியா ஆகும்.
இது நாட்டின் மிகச்சிறந்த அரசதந்திர வெற்றி என்று மடானி (MADANI) அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
மலேசியா போன்ற ஒரு நாடு மியன்மாரைத் தனது அகதிகளைத் திரும்பப் பெறச் சம்மதிக்க வைத்தது உலகிலேயே இதுவே முதல் முறை என்றும், இந்த அகதிகள் அனைவரும் மியன்மார் அரசாங்கத்தின் சொந்தச் செலவிலேயே திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் தொடர்பு அமைச்சருமான பாஃஹ்மி தெரிவித்தார்.
பெர்னாமா செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த தொடர்பு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 7, 8 -ஆம் தேதிகளில் மியன்மார் அதிபர் மின் ஆங் ஹ்லைங் (Min Aung Hlaing) மலேசியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணம், இன்னும் அதிகமான அகதிகளைத் திருப்பி அனுப்பி வைக்கும் வாய்ப்புகளைத் திறந்துவிட்டதாக ஃபஹ்மி கூறினார்.
இதன் மூலம், விரைவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மியன்மார் அகதிகள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
முன்னதாக, மலேசியா தனது முதல் கட்ட திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ், மியன்மார் கடற்படைக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கப்பல் உட்பட மூன்று கப்பல்களைப் பயன்படுத்தி, தடுப்புக் காவலில் இருந்த 1,476 மியன்மார் குடிமக்களை வெற்றிகரமாகத் திருப்பி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.




