ஜப்பானில் மலேசியர்கள் கோக்கெய்ன் கடத்தல் : விசாரிக்க புக்கிட் அமான் தனிக் குழுவை அனுப்புகிறது

14 அக்டோபர் 2026, 3:30 AM
ஜப்பானில் மலேசியர்கள் கோக்கெய்ன் கடத்தல் :  விசாரிக்க புக்கிட் அமான் தனிக் குழுவை அனுப்புகிறது
ஜப்பானில் மலேசியர்கள் கோக்கெய்ன் கடத்தல் :  விசாரிக்க புக்கிட் அமான் தனிக் குழுவை அனுப்புகிறது

ஷா ஆலாம், அக் 14 : தோக்யோவின் ஹனேடா அனைத்துலக விமான நிலையத்தில், ஐந்து மலேசியர்கள் கோகெய்ன் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து, அது குறித்து விசாரிக்க புக்கிட் அமான், குழுவொன்றை ஜப்பானுக்கு அனுப்பவுள்ளது.

அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறாவது நபர் மலேசியாவிற்குத் திரும்பியுள்ளார்.

மலேசியர்களின் இந்த கைது குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்கும், மலேசிய மற்றும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஆராய்வதற்கும் அந்த குழு அனுப்பப்படுவதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார்.

அக்டோபர் 10-ஆம் தேதி ஹனேடா அனைத்துலக விமான நிலையத்தில் இரு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் மலேசிய போலீசாரிடம் தெரிவித்தனர்.

அவர்கள் அணிந்திருந்த காலணிகளின் உள்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கோகெய்ன் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து அந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பயணப் பதிவுகளின்படி, அந்த ஆறு மலேசியர்களும் அக்டோபர் 9-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் இரண்டில் இருந்து விடுமுறைக்காக ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஐவர் மறுநாள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆறாவது நபர் கைது செய்யப்படாமல் மலேசியாவிற்குத் திரும்பியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றும் தொடர்புடைய ஆறு நபர்களும் 19 முதல் 26 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்களில் ஐவர் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஹுசைன் தெரிவித்தார்.

அவர்கள் யாருக்கும் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை.

இதனிடையே, இலவச அல்லது மலிவான விடுமுறைச் சுற்றுலா சலுகைகள் குறித்து பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறும், குறிப்பாக மற்றவர்களுக்காக பைகள் அல்லது உடமைகளை எடுத்துச் செல்லுமாறு கூறப்பட்டால் கவனமாக இருக்குமாறும் ஹுசைன் அறிவுறுத்தினார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களால் தாங்கள் பகடைக்காய்களாக (drug mules) பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, உள்ளடக்கங்களை அறியாமல் எந்தவொரு பொருட்களையும் ஏற்றுக்கொள்வதோ கொண்டு செல்வதோ செய்ய வேண்டாம் என்று அவர் பயணிகளுக்கு நினைவூட்டினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.