கோலாலம்பூர், அக் 14: மலேசியாவில் 30 வயது மற்றும் அதற்குட்பட்ட இளைஞர்கள், 2026-ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 540 கோடி ரிங்கிட் மதிப்பிலான ' இப்போது வாங்கி பிறகு பணத்தை செலுத்தும்' கடன் திட்டத்தில் 6 கோடியே 59 லட்சம் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளனர்.
இது நாட்டின் ஒட்டுமொத்த, ' இப்போது வாங்கி பிறகு பணத்தை செலுத்தும்' கடன் திட்டத்தின் பரிவர்த்தனை எண்ணிக்கையில் 37.9 விழுக்காடாகும்.
மலேசிய நாடாளுமன்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் நிதி அமைச்சு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் மலேசியாவின் ஒட்டுமொத்த ' இப்போது வாங்கி பிறகு பணத்தை செலுத்தும்' கடன் திட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 17 கோடியே 39 லட்சமாகப் பதிவாகியதுடன், அதன் மொத்த மதிப்பு 1,470 கோடி ரிங்கிட்டாகும்.
இதில் இளைஞர்களின் பங்களிப்பு மட்டும் மொத்த மதிப்பில் 36.7 விழுக்காடாகும்.
கடந்த 2026 ஜூன் 30 நிலவரப்படி, ' இப்போது வாங்கி பிறகு பணத்தை செலுத்தும்' முறையின் மூலமாக, இளைஞர்களுக்கான நிலுவையில் உள்ள மொத்த கடன் தொகை 240 கோடி ரிங்கிட்டாக உள்ளது.
இதில் செலுத்தப்படாத அல்லது வாராக்கடன் தொகை 9 கோடியே 68 லட்சம் ரிங்கிட்டாகும்.
இது நிலுவையில் உள்ள மொத்த தொகையில் 4.0 விழுக்காடாகும்.
பயனீட்டாளர் கடன் ஆணையம் (Consumer Credit Commission) பயனீட்டாளரின் ஒட்டுமொத்த கடன் பொறுப்புகளை மதிப்பிடுவது உட்பட, இந்த இப்போது வாங்கி பிறகு பணத்தை செலுத்தும் திட்டங்கள் மூலம் இளைஞர்கள் அதிக கடன் சுமைக்கு ஆளாவதில் இருந்து அவர்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்று கோலா நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரசாக் எழுப்பிய கேள்விக்குத் பதிலளிக்கையில் நிதி அமைச்சு இந்த விவரங்களை வழங்கியது.



