அலோர் ஸ்டார், அக் 14: அலோர் ஸ்டார், மெர்காங்கில் நேற்று இரவு நடைபெற்ற 'தொகோங் சாயுர்' (Tokong Sayur) ஊர்வலத்தின் போது கொண்டுச் செல்லப்பட்ட கொடி ஒன்று, உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசயதில் மூன்று பதின்ம வயதினர் காயமடைந்தனர்.
நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் மெர்காங்கின் முக்கியச் சாலையின் வழியாக இந்த ஊர்வலத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
லேசான மழையின் போது பலத்த காற்று வீசியதால், அந்த பதின்ம வயதினர் ஒருவரால் பிடிக்கப்பட்டிருந்த கொடி , நிலைதடுமாறி அங்கிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது உரசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மின்சாரத் தாக்கத்தினால், அந்த மூன்று பதின்ம வயதினரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
16 , 17 வயதுடைய அந்தப் பாதிக்கப்பட்ட பதின்ம வயதினர் உடனடியாக சுல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக, இந்த விபத்தில் காயமடைந்த பதின்ம வயதினர் சாலையில் விழுந்து கிடப்பதும், மற்ற பங்கேற்பாளர்கள் அவர்களுக்கு உதவும் காட்சிகளும் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.



