ஷா ஆலாம், அக் 13 - எல்,இசட்.ஜே மேனேஜ்மென்ட் (LZJ Management) நிறுவனத்தில் தனது தந்தையும் சகோதரியும் முக்கிய நிதி, நிர்வாக முடிவுகளை எடுப்பதைத் தடுப்பதற்காக , நாட்டின் பூப்பந்து வீரர் லீ சீ ஜியா (Lee Zii Jia), கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரியுள்ளார்.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், அவரது தந்தை லீ சீ ஹின் (Lee Chee Hin), மூத்த சகோதரி லீ ஜி யீ (Lee Zii Yii), தம்பி லீ தாவ் (Lee Tao) மற்றும் LZJ மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தற்போது உலக பூப்பந்து கூட்டமைப்பின் (BWF) தரவரிசையில் 42-வது இடத்தில் இருக்கும் சீ ஜியா, LZJ மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருக்கும் தனது தந்தை சீ ஹின் மற்றும் சகோதரி சீ யீ ஆகியோர், தங்களின் மாதாந்திர சம்பளத்தைத் தாண்டி இயக்குநர்களுக்கான கட்டணம், அலவன்ஸ், போனஸ் அல்லது பிற நிதிச் சலுகைகளைத் தங்களுக்குத் தாங்களே அங்கீகரித்துக் கொள்வதைத் தடுக்க முயற்சிக்கின்றார்.
மலேசிய பூப்பந்து சங்கத்திலிருந்து (BAM) வெளியேறி, தொழில்முறை ஆட்டக்காரராக விளையாடி வரும் சீ ஜியா, அவருடைய விளையாட்டு வாழ்க்கை மற்றும் வர்த்தக வாய்ப்புகளைக் கையாள்வதற்காக LZJ மேனேஜ்மென்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
முன்னாள் அகில இங்கிலாந்து வெற்றியாளரான சீ ஜியா, அந்த நிறுவனத்தில் 90% பங்குகளையும் , சீ யீ 9%, லீ தாவ் 1% பங்குகளையும் வைத்துள்ளனர்.
இயக்குநர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது, நிறுவனத்தின் செயலாளரை நியமிப்பது, சொத்துக்களை விற்பது, புதிய பங்குகளை வெளியிடுவது மற்றும் பங்குரிமை கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வது போன்ற முடிவுகளைக் கட்டுப்படுத்தவும் சீ ஜியா கோரியுள்ளதாக, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (NST) செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அவர், LZJ மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண அந்நிறுவனம் சிறப்பு பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கும் நீதிமன்ற உத்தரவைக் கோரியுள்ளார்.




