ஷா ஆலாம், அக். 13 : போதைப்பொருள் தாக்கத்தின் கீழ் , போக்குவரத்துக்கு எதிர் திசையில் லாரியை ஓட்டி நான்கு பேருக்கு காயத்தை ஏற்படுத்திய வழக்கில், லாரி ஓட்டுநர் ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
51 வயதான சி. அகிலன் மீது அக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) மற்றும் ஆம்பேட்டமைன் (amphetamine) ஆகிய போதைப்பொருட்களின் தாக்கத்தின் கீழ் லாரியை ஓட்டியதாகவும், இதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் 58 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு பேருக்கு காயத்தை ஏற்படுத்தியதாகவும் அகிலன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அக்டோபர் 9-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் பெர்சியாரான் மொக்தார் டஹாரியில் (Persiaran Mokhtar Dahari) இந்த குற்றத்தைச் செய்ததாக அகிலன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அகிலன் , 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1A)(a)-இன் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அக்குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதனிடையே, மற்றொரு நீதிமன்றத்தில், மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஆம்பேட்டமைன் ஆகிய போதைப்பொருட்களை சுயநுகர்வு செய்த குற்றச்சாட்டுக்கும் அகிலன் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.
இந்த குற்றச்சாட்டு 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 15(1)(a)-இன் கீழ் வாசிக்கப்பட்டது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
முதல் குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் 9,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையை அனுமதித்து, வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது.
இரண்டாவது குற்றச்சாட்டுக்கு அவருக்கு 3,900 ரிங்கிட் உத்தரவாதத் தொகை அனுமதிக்கப்பட்டது.
இந்த வழக்குகள் முறையே இவ்வாண்டு டிசம்பர் 22 மற்றும் 2027 ஜனவரி 11 ஆகிய தேதிகளில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.




