தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி

12 அக்டோபர் 2026, 4:39 PM
தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாபெரும் பேரணி

புது டில்லி, அக் 13 -வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி நடத்தினர்.

"ஜனநாயகத்திற்கான பேரணி" என்ற பெயரில் திங்கள்கிழமை நடைபெற்ற அந்தப் போராட்டம், டெல்லியில் அண்மைய காலமாக நடந்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாகும்.

அந்த பேரணியை ஒட்டி டெல்லியில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, சாலைகள் தடுப்புகளால் மூடப்பட்டிருந்தன. முன்னதாக, கடந்த வார இறுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆயிரக்கணக்கானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பல கோடி மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தத் தேர்தல் திருத்த நடைமுறையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே சட்டம், ஒழுங்கு காரணங்களைக் காட்டி போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்து வந்தனர்.

கடந்த வார இறுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற குழு போராட்டம் நடத்த முயன்றபோது டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

பேரணி நடைபெற்ற மத்திய டெல்லி மற்றும் அதன் வழித்தடங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், சில மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளும் மூடப்பட்டன.

கடந்த வார இறுதியில் போலீசார், செய்தியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

பெண்கள் உட்பட பலரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேருந்துகளில் ஏற்றிய வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகின.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.