காஜாங்கில் கனமழைக்குப் பின் தடுப்புச்சுவர் இடிந்து 6 வாகனங்கள் சேதம்

12 அக்டோபர் 2026, 3:40 PM
காஜாங்கில் கனமழைக்குப் பின் தடுப்புச்சுவர் இடிந்து 6 வாகனங்கள் சேதம்

காஜாங்,அக் 12 : இன்று மாலை பெய்த கனமழை காரணமாக ஐந்து மீட்டர் உயரமுள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில், காஜாங்,ஜாலான் நீலாம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு வாகனங்கள் சேதமடைந்தன.

மாலை 5 மணியளவில் நடந்த அந்தச் சம்பவத்தில், மண் சரிந்து விழுந்ததில் மூன்று கார்களும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன.

மதியம் 3 மணியளவில் தொடங்கிய கனமழையைத் தொடர்ந்து, மண்ணின் நகர்வைத் தாங்க முடியாமல் அந்தத் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.

அந்தச் சம்பவத்தில் புரோட்டான் சாகா, புரோட்டான் சாத்ரியா மற்றும் புரோட்டான் வீரா ஏரோபேக் ஆகிய 3 கார்கள் சேதமடைந்தன.

மேலும், "யமஹா நுவோ , ஹோண்டா வேவ் மற்றும் யமஹா லகெண்டா ஆகிய மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்ததாக, நாஸ்ரோன் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவத்தில் உயிரிழப்போ காயங்களோ ஏற்படவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

kajang.jpg

நிலச்சரிவுக்கான துல்லியமான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருவதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு நிறுவனத்தின் செயல்பாட்டு அதிகாரி வான் நபீஹா ரம்லி (35) கூறுகையில், சம்பவம் நடந்தபோது தான் பணியில் இருந்ததாகக் கூறினார்.

மாலை 5 மணியளவில், ஒரு பலத்த சத்தம் கேட்டதுடன், மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு சத்தமிடத் தொடங்கினர். நாங்கள் வெளியே பார்த்தபோது, அனைத்தும் ஏற்கனவே இடிந்து விழுந்திருந்தது. எல்லாம் மிக விரைவாக நடந்து முடிந்தது," என்று அவர் சம்பவ இடத்தில் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் சில மாதங்களுக்கு முன்புதான் வேலி அமைக்கப்பட்டதாகவும், அது அங்கு பணிபுரிபவர்களுக்குப் பாதுகாப்பான உணர்வைத் தந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால் தற்போது நிலச்சரிவிற்குப் பிறகு உண்மை அதுவல்ல என்பதை உணர்ந்தோம்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.