அடுத்த ஆண்டு 44 ரிமா ரியாங் வீடுகள் 'வாடகைக்கு எடுத்து சொந்தமாக்கும் திட்டம்' மூலம் விற்பனை

12 அக்டோபர் 2026, 10:57 AM
அடுத்த ஆண்டு 44 ரிமா ரியாங் வீடுகள் 'வாடகைக்கு எடுத்து சொந்தமாக்கும் திட்டம்' மூலம் விற்பனை
அடுத்த ஆண்டு 44 ரிமா ரியாங் வீடுகள் 'வாடகைக்கு எடுத்து சொந்தமாக்கும் திட்டம்' மூலம் விற்பனை
அடுத்த ஆண்டு 44 ரிமா ரியாங் வீடுகள் 'வாடகைக்கு எடுத்து சொந்தமாக்கும் திட்டம்' மூலம் விற்பனை

ஷா ஆலாம், அக். 12 - பெட்டாலிங் ஜெயா, PJS1-இல் உள்ள ரிமா ரியாங் அடுக்குமாடி குடியிருப்பில் (Pangsapuri Rima Riang) குடியேறியவர்கள் எதிர்கொண்டிருக்கும் வீட்டுக் கடன் சிக்கல்களுக்குத் தீர்வொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அக்குடியிருப்பில் உள்ள 44 வீடுகள், 'வாடகைக்கு எடுத்து சொந்தமாக்கும் திட்டத்தின் ' கீழ் விற்கப்படவுள்ளன.

B40 வருமானப் பிரிவினர் தங்களுக்கு எனச் சொந்தமாக வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் பெறுவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தின் கீழ் தலா 42,000 ரிங்கிட் மதிப்பிலான வீடுகள் வழங்கப்படவுள்ளதாக வீடமைப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.

வீடமைப்புக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா : மீடியா சிலாங்கூர்

இன்று இங்கு எட்டு மாநிலங்களின் வீடமைப்பு அமைப்புகளை ஒன்றிணைத்து நடைபெற்ற தேசிய வீடமைப்பு கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் போர்ஹான் செய்தியாளர்களிடம் பேசினார்.

"நாங்கள் இந்தத் திட்டத்தை முதற்கட்டமாக பெட்டாலிங் ஜெயாவில் 42,000 ரிங்கிட் விலையிலான 44 வீடுகளுடன் தொடங்குகிறோம். இதனை B40 பிரிவினருக்கு வழங்கி, அவர்கள் அங்கு வசித்து, முறையாக வாடகை செலுத்தி, இறுதியில் அந்த வீட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வழிவகை செய்வோம்.

இதனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செய்யவுள்ளோம்," என்று கூறினார்.

ஷா ஆலாமில் நடைபெற்ற தேசிய வீடமைப்பு கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள் : படம் -மீடியா சிலாங்கூர்

நேரடியாக வீடு வாங்குவதற்கு நிதியுதவி மற்றும் கடன் வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு இந்த அணுகுமுறை ஒரு சிறந்த மாற்றாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ரிமா ரியாங் அடுக்குமாடி குடியிருப்பின் பிரச்சினை இரு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்தது. அதன் பின்னரே, வீடுகளை வாங்கிய அசல் உரிமையாளர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களின் வீட்டுச் சாவிகளைப் பெற்று அங்கு குடியேறத் தொடங்கினர்.

இருப்பினும், வங்கிக் கடன்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் இன்னும் சிலர் வீட்டின் உரிமையைப் முழுமையாகப் பெறுவதற்கு பெரும் தடையாகவே நீடித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம், PJS1 பிளாக் E வீடு மற்றும் கடை உரிமையாளர்களின் செயற்குழுவும் இந்த நிதியுதவிப் பிரச்சினையை எழுப்பியிருந்தது.

இதனால் வீட்டின் உரிமையைப் பெறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

மாநில அரசு திட்டமிட்டுள்ள இந்த வாடகைக்கு எடுத்து சொந்தமாக்கும் திட்டத்தின் அமலாக்கம், இப்பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.