வரம்பற்ற பயணங்களுக்கான ‘மைகொமுட்டர்50’ அட்டை டிசம்பர் 1 அறிமுகமாகலாம்

12 அக்டோபர் 2026, 10:07 AM
வரம்பற்ற பயணங்களுக்கான ‘மைகொமுட்டர்50’  அட்டை டிசம்பர் 1  அறிமுகமாகலாம்

கோலாலம்பூர், அக் 10 - புதிய 50 ரிங்கிட் மாதாந்திர ‘மைகொமுட்டர்50’ பயணிகள் அட்டை அறிமுகமாகும்போது , பயணிகள் தங்களின் கேடிஎம் கொமுட்டர் பயணக் கட்டணத்தில் கணிசமாக சேமிக்க முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் மலேசியர்கள் 50 ரிங்கிட் கட்டணத்தில் 30 நாட்களுக்கு கேடிஎம் கொமுட்டரில் வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ளலாம்.

இந்த பயண அட்டை நடைமுறைக்கு வர, ஜனவரி 1-ஆம் தேதி இறுதி காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், டிசம்பர் 1-ஆம் தேதியே அந்த அட்டையை அறிமுகப்படுத்தும் முயற்சியினை போக்குவரத்து அமைச்சு தீவிரமாக மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரசரானா நிறுவனத்தின் 'மை50' எல் .ஆர்.டி ரயில் பயணிகள் அட்டைக்கு இணையாக, கேடிஎம் கொமுட்டர் சேவைக்கும் அத்தகைய அட்டை வேண்டும் என்ற பொதுமக்களின் பரவலான கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்துள்ளது.

பயணிகள் இந்த அட்டையைப் பெறுவதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானவை என்பதோடு இதற்கு மைகாட் அடையாள அட்டை மட்டுமே போதுமானது என்று அமைச்சர் கூறினார்.

விண்ணப்பதாரர்கள் மலேசியர்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என்றாரவர்.

KTMB நிறுவனம் தற்போது இந்த அட்டையைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கி வருவதாகவும், நீண்டப் பதிவு நடைமுறைகளைத் தவிர்க்க அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிக்கெட் முறை குறித்து KTMB-யுடன் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், டிஜிட்டல் முறையிலான வசதிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் லோக் மேலும் தெரிவித்தார்.

இந்த 50 ரிங்கிட் மாதாந்திர ‘மைகொமுட்டர்50’ பயணிகள் அட்டை, நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் வாழ்க்கைச் செலவினங்களை நேரடியாகக் குறைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு மிகவும் கணிசமானது ஆகும்.

குறிப்பாக, தஞ்சோங் மாலிம் மற்றும் கோலாலம்பூர் இடையே பயணிப்பவர்கள் வழக்கமாக 40 பயணங்களுக்கு ஆகும் 416 ரிங்கிட் கட்டணத்திற்குப் பதிலாக வெறும் 50 ரிங்கிட் மட்டும் செலுத்தி மாதத்திற்கு 366 ரிங்கிட் வரை சேமிக்கலாம்.

அதேபோல், அலோர் ஸ்டார் முதல் பட்டர்வொர்த் வரை பயணிப்பவர்கள் மாதத்திற்கு 250 ரிங்கிட் வரையிலும், குளுவாங் மற்றும் ஜொகூர் பாரு இடையிலான கேடிஎம் ஷட்டில் செலாத்தான் பயணிகள் மாதத்திற்கு 200 ரிங்கிட்டுக்கும் மேலாகவும் சேமிக்க முடியும்.

மேலும், சிரம்பானில் இருந்து கோலாலம்பூருக்கு பயணிப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தது 300 ரிங்கிட் வரை சேமிக்கலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை 2027 வரவு செலவுத் திட்ட தாக்கலின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமால் அறிவிக்கப்பட்ட இந்த ‘மைகொமுட்டர்50’ அட்டையின் மூலம் சுமார் 40,000 பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.