ஷா ஆலாம், அக். 12 – சிலாங்கூரில் தொடர்ந்து நீடித்து வரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மாநிலம் தழுவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றங்கள் (PBT) தத்தம் பகுதிகளில் தனித்தனியாக நடவடிக்கை எடுப்பதைவிட, மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை முன்னெடுப்பது சிறந்த பலனைத் தரும்.
இதனை மீடியா சிலாங்கூரின் 'SKOP பெலாஞ்சவான் சிலாங்கூர் 2027' நிகழ்ச்சியின் போது காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கியான் யோங் கூறினார்.

இதற்கிடையில், பிடிக்கப்படும் தெருநாய்களைப் பராமரிப்பதற்காக அரசுக்குச் சொந்தமான நிலத்தில் வேலியிடப்பட்ட சிறப்புப் பகுதியை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் டேவிட் பரிந்துரைத்தார்.
அந்த இடத்தில் ஆண் மற்றும் பெண் நாய்களைத் தனித்தனியாகப் பிரித்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக, தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அடுத்த ஆண்டு கருத்தடைத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் தனி நிதி ஒதுக்கீட்டைத் ஒதுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் கூறினார்.

இதனிடையே, தெருநாய்களின் தொல்லை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதுடன், சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிப்பதால் இப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என டேவிட் வலியுறுத்தினார்.
எனவே, சிலாங்கூரின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இப்பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



