கோலாலம்பூர், அக்.9 - லாவோஸில் 521 கிலோ மெத்தம்பேட்டமைன் (methamphetamine) போதைப்பொருளைக் கடத்தும் முயற்சியின்போது பயன்படுத்தப்பட்ட தனியார் ஜெட் விமானத்தை , இரு வாரங்களுக்கு முன்பு பிலிப்பீன்ஸ் ஆடவன் முன் பதிவு செய்துள்ளான்.
அந்த நபர் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என நம்பப்படுவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
அந்த நபர், இரு மலேசிய விமானிகள் மற்றும் இரு சிங்கப்பூரர்களுக்குச் சொந்தமான தனியார் விமான நிறுவனத்தின் சேவையை 49,500 அமெரிக்க டாலர் (RM202,300) கட்டணத்தில் பெற்றுள்ளார்.
லாவோஸிலிருந்து பிலிப்பின்ஸின் மணிலா நகருக்குச் செல்வதற்காக இந்த முன்பதிவு செய்யப்பட்டது என்றும், அதில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் 'வேப்' (vape) பொருட்கள் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் உரிமையாளருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா அல்லது அவர்களும் அக்கும்பலால் ஏமாற்றப்பட்டார்களா என்பது குறித்து நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.
விமானத்தை முன்பதிவு செய்ததாக நம்பப்படும் பிலிப்பீன்ஸ் நபர் குறித்த கூடுதல் விவரங்களை போலீஸ் சேகரித்து வருவதாகவும், அந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கு உதவ பிலிப்பீன்ஸ் போதைப்பொருள் தடுப்பு அமைப்புடன் தகவல்கள் ஏற்கனவே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹுசேன் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில்,அந்த பிலிப்பீன்ஸ் ஆடவன், சம்பந்தப்பட்ட தனியார் ஜெட் விமான நிறுவனத்தின் சேவையை முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளான் எனவும் , அந்நிறுவனம் மிகக் குறைந்த விலையை வழங்கியதால் அதைத் தேர்ந்தெடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
மலேசியாவில் இயங்கும் அந்த தனியார் ஜெட் நிறுவனம், கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட இரு கிளைகளைக் கொண்டுள்ளது என்றும், சுபாங்கில் இரு ஜெட் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார்.
"அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பல்வேறு விமான நிறுவனங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு விமானி ஆவார்; அவர் இப்போது தனியார் வணிகச் சேவைகளை வழங்க ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்," என்று அவர் இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் (IPK) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை சுபாங் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில், அந்த தனியார் விமான நிறுவனத்தின் உரிமையாளரான உள்ளூர் நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் நான்கு பேரும் விடுவிக்கப்பட்டதாக ஹூசேன் கூறினார்.



