குவாந்தான், அக் 7 : குவாந்தான்,ஆயிர் புத்தேவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் 19 வயது மாணவி ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவத்திற்கு பொறாமை உணர்வே காரணம் என்று நம்பப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா பாலிடெக்னிக் கல்வி கூடத்தில் பயின்று வந்த அந்த மாணவியும், அவரது காதலனும் சுமார் ஒரு வருடமாக ஒருவரையொருவர் அறிவர் என்று குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மூன்று வீட்டுத் தோழர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, காதல் ஜோடியினருக்கு இடையே ஏற்பட்ட தவறான புரிதலால் இந்த சம்பவம் நேரிட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலனிடமிருந்து அதிகாலை மணி 4.32-க்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அப்பெண் கழுத்தில் நெரிக்கப்பட்ட அடையாளங்களுடன் படுக்கையில் சுயநினைவற்ற நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது.
அதையடுத்து போலீசார் சம்பவ இடத்திலே 19 வயதான அப்பெண்ணின் காதலனைக் கைது செய்தனர்.



