சுபாங் ஜெட் விமானம் லாவோஸில் 521 கிலோ போதைப் பொருளை ஏற்றியது; மலேசியாவில் அல்ல

7 அக்டோபர் 2026, 1:52 AM
சுபாங் ஜெட் விமானம் லாவோஸில் 521 கிலோ போதைப் பொருளை ஏற்றியது; மலேசியாவில்  அல்ல

கோலாலம்பூர், அக் 7: பிலிப்பின்சுக்கு 521 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் (methamphetamine) போதைப்பொருளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சுபாங்கிலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் ஜெட் விமானம், அந்த போதைப் பொருளை மலேசியாவில் இருந்து எடுத்துச் செல்லவில்லை. லாவோஸில் அந்த பொருளைப் பெற்றதாக நம்பப்படுகிறது.

லாவோஸ் அதிகாரிகளின் தகவல்படி, அந்தச் சிறப்பு வாடகை விமானம் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி சுபாங்கிலிருந்து லாவோஸில் உள்ள லுவாங் பிரபாங் அனைத்துலக விமான நிலையத்திற்குப் புறப்பட்டது என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

அந்த விமானத்தில் சிங்கப்பூர் நாட்டு விமானி, மலேசிய நாட்டு உதவி விமானி மற்றும் பிலிப்பீன்ஸ் பயணி என மூன்று நபர்கள் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார்.

"கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மணிலா, பிலிப்பீன்ன்ஸ் சந்தைக்கானதே தவிர, மலேசிய சந்தைக்கானது அல்ல. லாவோஸிலிருந்து மணிலாவிற்கு அந்த போதைப் பொருளைக் கொண்டுச் செல்லவே அந்த விமானம் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது," என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

லாவோஸ் அதிகாரிகள் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில், சம்பவத்தின் காலவரிசையை விவரித்த ஹுசைன், விமானம் உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணியளவில் லுவாங் பிரபாங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது என்றார்.

மதியம் 1.30 மணியளவில், இரு வாகனங்கள் விமான நிலையப் பகுதிக்கு வந்தன. பின்னர் அங்கிருந்த சில ஊழியர்கள் அந்த வாகனங்களிலிருந்து 23 பைகளை விமானத்திற்கு மாற்றுவதற்கு உதவினர் என்று அவர் கூறினார்.

"அந்த 23 பைகளையும் சோதித்ததில், 521 கிலோ எடையுள்ள மெத்தாம்பேட்டமைன் என சந்தேகிக்கப்படும் 500 போதைப்பொருள் பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டன," என்றார் அவர்.

லாவோஸ் அதிகாரிகளின் அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சுபாங்கிலிருந்து விமானத்தில் சென்ற மூன்று நபர்கள் உட்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 10 லாவோஸ் நாட்டவர்களும் அடங்குவர். அவர்களில் மூவர் விமான நிலைய தரைவழி சேவை நிறுவன ஊழியர்கள் மற்றும் எழுவர் எக்ஸ்ரே ஸ்கேனிங் இயந்திரத்தை இயக்கும் ஊழியர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் அனைவரும் தற்போது அந்நாட்டு அதிகாரிகளால் மேற்விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரச மலேசிய போலீஸ் படையும் இது குறித்து முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றும், கைதான நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் திகாரிகள் விரைவில் லாவோஸுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் ஹுசைன் கூறினார்.

"குறிப்பாக மலேசியாவில் அந்த போதைப் பொருள் கும்பலுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விரிவான தகவல்கள் பெறப்படும் " என்றார்வர்.

லாவோஸில் பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் மலேசியாவிலிருந்து சென்ற விமானத்தைத் தொடர்புபடுத்திய ஆரம்பகட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து, இந்த சமீபத்திய அறிக்கை சுபாங்கிலிருந்து புறப்படும்போது அந்த விமானத்தில் போதைப்பொருள் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.