பண்டார் உத்தாமா கொலை சம்பவம்: நீதி கேட்டு மாணவியின் குடும்பத்தினர் சிவில் வழக்கு

4 அக்டோபர் 2026, 5:39 AM
பண்டார் உத்தாமா கொலை சம்பவம்: நீதி கேட்டு மாணவியின் குடும்பத்தினர் சிவில் வழக்கு

ஷா ஆலாம், அக் 4: கடந்தாண்டு அக்டோபர் 14-ஆம் தேதி மரணமடைந்த நான்காம் படிவ மாணவி யாப் ஷிங் சுவென் -னின் (Yap Shing Xuen) மரணம் தொடர்பாக, அவரது தாயாரும் மூத்த சகோதரியும் பல தரப்பினருக்கு எதிராக சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இந்தச் சட்ட நடவடிக்கை கடந்த அக்டோபர் 1 -ஆம் தேதி 'டெத்துவான் சுரேந்திர அனந்த்' (Tetuan Surendra Ananth) சட்ட நிறுவனம் மூலமாக தாக்கல் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் தெரிவித்தார்.

இந்த வழக்கில் பல அரசு அமைப்புகள், ஷிங் சுவெனின் மரணத்தோடு தொடர்புடைய சிறுவனின் பெற்றோர் மற்றும் அந்தச் சிறுவன் ஆகியோர் பிரதிவாதிகளாக (defendants) பெயரிடப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடையே உள்ள மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முறையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இந்தத் துயரத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று தங்களது குடும்பம் நம்புவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறினார்.

"இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இது போன்றதொரு சம்பவம் இனி எந்தவொரு பிள்ளைக்கும் நடக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பொறுப்பேற்கச் செய்வதற்கான முயற்சியாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அரசு அமைப்புகள், நிலைமை மோசமடைவதற்கு முன்பாகவே பள்ளிகளில் உள்ள மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அந்தச் சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு தொடரப்பட்டதற்குக் காரணம், முன்னரே பல எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தபோதிலும், தங்களது பிள்ளை மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் கடமை அவர்களுக்கு இருந்ததாக அவர் தெரிவித்தார்.

"இந்தக் கேள்விகள் அனைத்தும் மிகவும் முக்கியமானவை. இந்த அனைத்துக் கேள்விகளையும் நீதிமன்றம் முறையாகக் கேட்டு ஆராயும் வகையில் ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவம், பள்ளி மாணவர்களிடையே மனநலம் தொடர்பான விரிவான கொள்கைகளை அமல்படுத்துவதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இன்றைய காலகட்டத்தில் நமது பிள்ளைகளிடையே அதிகரித்து வரும் மனநல சவால்களைக் கண்டு நாம் இன்னும் அமைதியாக இருக்க முடியாது. வெறும் பெரிய அறிக்கைகளும் திட்டங்களும் மட்டும் போதாது. மேலும் பல உயிர்கள் பறிபோகும் வரை நாம் காத்திருக்கக் கூடாது," என்று அவர் விளக்கினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.